PUBLISHED ON : ஆக 17, 2026 01:23 AM

மெது வடையை கடித்தபடியே, “பதவி உயர்வு பட்டியல்ல குழப்பம் பண்றா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“பத்திரப்பதிவுத் துறையில் தான்... த.வெ.க., அரசு வந்ததும், எந்த வசூலும் இல்லாம சார் - பதிவாளர்கள் இட மாறுதல் நடக்கறதோல்லியோ... இந்த சூழல்ல, இரண்டாம் நிலை சார் - பதிவாளர் இடங்களுக்கான பதவி உயர்வை, பிரச்னையில்லாம முடிக்க பதிவுத்துறை உயர் அதிகாரிகள் முடிவு பண்ணா ஓய்...
“இதுக்கான தகுதி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்துது... இதுல, பொது மற்றும் பி.சி., பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்து, எம்.பி.சி., - எஸ்.சி., பிரிவினர் பின்னுக்கு தள்ளப்பட்டதா புகார்கள் எழுந்திருக்கு ஓய்...
“சார் - பதிவாளர் சங்க நிர்வாகிகள் சிலர் தான் இந்த குழப்பத்துக்கு காரணம்னு, உயர் அதிகாரிகள் கண்டுபிடிச்சிருக்கா... அவா மேல நடவடிக்கை எடுக்கவும் தயாராகிட்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“கடும் மன உளைச்சல்ல இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை விமான நிலைய போலீசாரை தான் சொல்றேன்... இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார்னு 80க்கும் மேற்பட்டவங்க இங்க இருக்காங்க பா...
“இதுல முக்கால்வாசி போலீசாரை, கிண்டி, மயிலாப்பூர், பிராட்வேன்னு நகரின் பல பகுதிகளுக்கும் பாதுகாப்பு பணிக்கு அனுப்பிடுறாங்க... அதுலயும், எஸ்.ஐ.,க்கள் நிலைமை ரொம்பவே மோசம் பா...
“புதுசா இடமாறுதல்ல வந்தவங்களை, ஒரு நாள் விமான நிலைய பணி, மறுநாள் பாதுகாப்பு பணின்னு பந்தாடுறாங்க... அதேநேரம், காலம் காலமா இங்கயே இருக்கிற பழைய எஸ்.ஐ.,க்களை எங்கயும் அனுப்ப மாட்டேங்கிறாங்க பா...
“இரவு பணி முடிச்சிட்டு, அதிகாலை 1:00 மணிக்கு வந்து படுக்கிற போலீசாருக்கு, 1:30 மணிக்கு, 'அதிகாலை 6:00 மணிக்கு நீலாங்கரை பக்கம் முதல்வர் பாதுகாப்பு பணிக்கு போங்க'ன்னு, 'மெசேஜ்' அனுப்புறாங்க... இதனால, சரியான துாக்கமில்லாம பலரும் அவதிப்படுறாங்க... 'தெரியாம வந்து இங்க மாட்டிக்கிட் டோமே'ன்னு, புலம்பிட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“என்கிட்டயும் ஒரு போலீஸ் தகவல் இருக்குல்லா...” என்ற பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் இருக்கு... இங்க, 970 குடும்பங்களைச் சேர்ந்த, 2,700 பேர் அகதிகளா இருக்காவ வே...
“இவங்க நடவடிக்கை மற்றும் முகாமில் வெளி நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, 'க்யூ' பிரிவு உளவு போலீசார் ரெண்டு பேர் இருக்காவ... இந்த முகாம் அலுவலகத்துக்கு, ஒரு ஆர்.ஐ., அலுவலகம் இருக்கு வே...
“கடந்த அஞ்சு வருஷமா காலியாவே இருந்த இடத்துக்கு, இப்ப தான் ஒரு ஆர்.ஐ.,யை நியமிச்சிருக்காவ... இடைப்பட்ட அஞ்சு வருஷத்துல, இந்த அலுவலகத்தை க்யூ பிரிவு போலீசார் ஆக்கிரமிச்சு, தங்களது ஆபீசாவே மாத்திட்டாவ வே...
“அகதிகளுக்கு அரசு சார்பில், மாசா மாசம் உதவித்தொகை வழங்குதாவ... சில அகதிகள், முகாம்ல பதிவு பண்ணிட்டு வெளியில குடியிருக்காவ வே...
“அவங்களுக்கான உதவித்தொகையை இந்த போலீசாரே, 'ஆட்டை' போட்டுடுதாவ... 'இவங்க மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்'னு, அகதிகள் எல்லாம் கேட்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“வேலன், கோபி இப்படி உட்காருங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
