/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மத்திய அரசு நிதியை செலவு செய்ததில் ரூ.1 கோடி இழப்பு திருப்பி செலுத்துவதில் ஊராட்சி நிர்வாகங்கள் சுணக்கம்
/
மத்திய அரசு நிதியை செலவு செய்ததில் ரூ.1 கோடி இழப்பு திருப்பி செலுத்துவதில் ஊராட்சி நிர்வாகங்கள் சுணக்கம்
மத்திய அரசு நிதியை செலவு செய்ததில் ரூ.1 கோடி இழப்பு திருப்பி செலுத்துவதில் ஊராட்சி நிர்வாகங்கள் சுணக்கம்
மத்திய அரசு நிதியை செலவு செய்ததில் ரூ.1 கோடி இழப்பு திருப்பி செலுத்துவதில் ஊராட்சி நிர்வாகங்கள் சுணக்கம்
PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM
காஞ்சிபுரம்,
மத்திய அரசின் நிதி செலவு செய்ததில், 1 கோடி ரூபாய் ஊராட்சி நிர்வாகங்கள் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளன. இந்த பணத்தை திரும்ப செலுத்துவதில், உள்ளாட்சி நிர்வாகங்கள் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 247 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இதில், 1.41 லட்சம் குடும்பங்களில், 1.70 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.48 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இந்த பணிகளில், ஏதேனும் குறைபாடுகளை கண்டுபிடிக்க சமூக தணிக்கை சங்கத்தின் மூலமாக, வரவு -- செலவு கணக்குகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுகிறது.
இதில், நிதி இழப்பு ஏற்படுத்திய குறைபாடுகளை கண்டுபிடித்து, சமூக தணிக்கையாளர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பணத்தை வசூலித்து வங்கி கணக்கில் செலுத்த வைக்கின்றனர்.
உதாரணமாக, ஒரு ஊராட்சி நிர்வாகம், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு பணி செய்வதற்கும், புதிய குளம் துார்வாருவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்கிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் பணிகளை முடித்து விடுகிறது.
ஒராண்டு கழித்து, சமூக தணிக்கை செய்யும் போது செடிகள் வளரவில்லை. குளம் துார்ந்துள்ளது என, குறைபாடுகளை கண்டுபிடிக்கின்றனர். இதற்கு நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என, சமூக தணிக்கை தடை எழுதுகின்றனர்.
இதற்கு காரணமான, ஊராட்சி செயலர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மீது நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் செலவிடப்பட்ட பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என, தணிக்கை தடை எழுதுகின்றனர்.
ஐந்து ஆண்டுகளாக சமூக தணிக்கை குறைபாடுகளை சரி செய்ய முடியாத நிலைக்கு, ஊரக வளர்ச்சி சமூக தணிக்கையாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
குறிப்பாக, 2020 - -21ம் நிதி ஆண்டு முதல், 2024- - 25ம் நிதி ஆண்டு வரையில், 817 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு, ஒரு கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியை, ஊராட்சி நிர்வாகங்கள் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிதி இழப்பு பணத்தை, திரும்ப செலுத்த வேண்டும் என, சமூக தணிக்கையாளர்கள் ஊராட்சி நிர்வாகங்களிடம் அறிவுரை வழங்கியும் பணம் செலுத்துவதில் இழுபறி ஏற்படுகிறது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது:
ஊராட்சியில் 100 மரக்கன்றுகள் நடுகிறோம். ஆடு, மாடு மேய்ந்துவிட்டால், சமூக தணிக்கை அலுவலர் ஆய்வுக்கு வரும் போது, மரம் இருப்பதில்லை. இதற்கு செலவிடப்பட்ட நிதியை மீண்டும் மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
இயற்கை இடர்பாடுகளில், மரக்கன்றுகள் இறந்துவிட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும். இதற்கு எங்களிடம் பணம் வசூலித்தால் எப்படி செலுத்த முடியும் என, புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக தணிக்கை குறைபாடுகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் மீது எழுதப்படும். அந்த குறைபாடுகளை சரி செய்த பின், தணிக்கை தடைகள் நீக்கப்படும். குறைபாடுகளை நீக்க தவறினால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை தடை ஏற்படும். குறைபாடுகளை சரி செய்த பின் சலுகைகள் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.