/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' டாஸ்மாக் ' கடைகளின் நேரத்தை குறைக்க திட்டம்!
/
' டாஸ்மாக் ' கடைகளின் நேரத்தை குறைக்க திட்டம்!
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''பிரமாண்ட நிழற்குடை கட்டி குடுத்துட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரான, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வசம், கூடுதலா மேற்கு சட்டசபை தொகுதியையும் முதல்வர் ஸ்டாலின் குடுத்திருக்காருல்லா... இதனால, மேற்கு தொகுதிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல நலத்திட்டங்களை மூர்த்தி வாரி வழங்கியிருக்காரு வே...
''ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருக்கிற வீரமாகாளியம்மன் கோவிலுக்கு நிழற்குடை அமைக்கணும்னு பக்தர்கள் கேட்டுட்டே இருந்தாவ... அமைச்சர், சமீபத்துல அந்த கோவிலுக்கு போய் அம்மனை தரிசனம் பண்ணிட்டு, சென்னைக்கு போயிருக்காரு வே...
''இதுக்கு இடையில, தி.மு.க., பொதுக்குழுவை நடத்துறதுல திருச்சி நேருவுக்கும், மதுரை மூர்த்திக்கும் கடும் போட்டி நடந்திருக்கு... கடைசியா, மதுரையிலயே நடத்த முடிவு செய்த ஸ்டாலின், பொறுப்பை மூர்த்தியிடம் ஒப்படைச்சுட்டாரு வே...
''வீரமாகாளியம்மனை கும்பிட்ட ராசியில தான், இந்த வாய்ப்பு கிடைச்சதுன்னு நினைச்ச மூர்த்தி, அந்த கோவிலுக்கு, 50 லட்சம் ரூபாய் செலவுல பிரமாண்ட நிழற்குடையை கட்டி குடுத்துட்டாரு... வர்ற 31ம் தேதி முதல்வர் மதுரை வர்றப்ப, அவர் கையாலயே திறக்கவும் திட்டமிட்டிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பெண் அதிகாரியை மிரட்டிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையின் பக்கத்து மாவட்டத்துல இருக்கும் பிரபலமான முருகன் கோவிலின் பெண் அதிகாரி, தலித் சமுதாயத்தை சேர்ந்தவங்க... கோவில் அறங்காவல் பணியில் இருக்கிற தொழிலதிபர், 'நான் சொல்றதை தான் நீ கேட்கணும்... நான் நினைச்சா நடக்கிறதே வேற'ன்னு பெண் அதிகாரியை மிரட்டுறாருங்க...
''பெண் அதிகாரியோ, 'நான் தலித் என்பதால இப்படி பேசுறாரா அல்லது ஆணாதிக்க மனப்பான்மையில பேசுறாரான்னு தெரியல... என்ன இருந்தாலும், பச்சை மையில் கையெழுத்து போடுற என் பதவிக்குக்கூட மரியாதை தர மாட்டேங்கிறாரே'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஸ்ரீதர், இந்த பேப்பரை அங்க வையும்...'' என, நண்பரிடம் கூறிய குப்பண்ணாவே, ''நேரத்தை குறைக்க போறாளாம் ஓய்...'' என்றார்.
''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அரசின், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மதியம், 12:00 மணியில இருந்து ராத்திரி 10:00 மணி வரைக்கும் திறந்திருக்கோல்லியோ... 2016ல் ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்தப்ப, 500 மதுக்கடைகளை மூடியதும் இல்லாம, கார்த்தால 10:00 மணிக்கே திறக்கப்பட்ட மதுக்கடைகளை மதியம் 12:00 மணிக்குன்னு மாத்தினாங்க ஓய்...
''அதே மாதிரி, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், 500 கடைகளை மூடுனாங்க... ஆனா, நேரக்குறைப்பு எதையும் அமல்படுத்தல ஓய்...
''இப்ப, டாஸ்மாக்ல 1,000 கோடி ரூபாய் முறைகேடு, மது விற்பனையால இளைஞர்கள் பாதிப்புன்னு எதிர்க்கட்சிகள் புகார் சொல்லிண்டே இருக்காளே... இதனால, மதுக்கடைகளை ராத்திரி ஒரு மணி நேரம் முன்னாடியே, அதாவது 9:00 மணிக்கே மூட தி.மு.க., அரசு முடிவு பண்ணிட்டதா, டாஸ்மாக் வட்டாரத்துல பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.