PUBLISHED ON : மார் 23, 2026 12:06 AM

''ஒரே தொகுதிக்கு, 30 பேர் மல்லுக்கட்டுறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''அப்ப, ஆளுங்கட்சியா தான் இருக்கணும்... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டசபை தொகுதி, இப்ப அ.தி.மு.க., வசம் இருக்கு... தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சியினர் இந்த தொகுதியை கேட்கிறாங்க...
''ஆனா, ஆளுங்கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனம் எடுத்த, 'சர்வே'யில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதின்னு தெரியவந்துட்டதால, இங்க தி.மு.க.,வே போட்டியிட விரும்புதுங்க...
''இந்த தொகுதிக்கு, தி.மு.க.,வுல, 30 பேர் விருப்ப மனு குடுத்திருக்காங்க... இதுல, சென்னை ஐகோர்ட் வக்கீல் கோ.அய்யனார், ரவிகுமார், பழனி ஆகிய மூணு பேர், தலைமையின் பரிசீலனையில் இருக்காங்க...
''ஆனா, இதையும் மீறி, மாவட்ட செயலர், மண்டல பொறுப்பாளரை பார்த்து, சீட் வாங்க சிலர் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் இதே மாதிரி ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''த.வெ.க., முதற்கட்ட வேட்பாளர்கள் நேர்காணல்ல, வட சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட மரியவில்சன், இப்பவே ஓட்டு வேட்டையை துவங்கிட்டாரு வே...
''இவர், வேற யாருமில்ல... பல கல்வி நிறுவனங்களுக்கு உரிமையாளரான, மறைந்த ஜேப்பியாரின் மருமகன் தான்...
''இவரது கல்வி நிறுவனங்கள்ல படிச்ச மாணவ - மாணவியர் எல்லாம், இப்ப, நிறைய தனியார் நிறுவனங்கள்ல உயர்ந்த பொறுப்புல இருக்காவ... இவங்க எல்லாம், 'லீவ் எடுத்துட்டு, மரிய செல்வனுக்கு தேர்தல் வேலை செய்றோம்'னு வாக்குறுதி தந்திருக்காவ வே...
''இந்த தொகுதியில் இருக்கிற இளைஞர் களின் உயர்கல்விக்கு உறுதுணையா இருப்பேன்னு சொல்லி, அவங்க ஆதரவை மரியவில்சன் திரட்டிட்டு இருக்காரு... 'தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு இவர் கடும் போட்டியை ஏற்படுத்துவார்'னு த.வெ.க.,வினர் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அ.தி.மு.க.,வுக்கு சாதகமா வேலை பார்க்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகம் முழுக்கவே, தி.மு.க.,வுக்கு ஆதரவா உளவுத்துறை போலீசார் வேலை பார்த்துட்டு இருக்காங்க... அதாவது, எந்தெந்த தொகுதியில், தி.மு.க., பலவீனமா இருக்கு, அதை எப்படி சரி பண்ணலாம்னு மேலிடத்துக்கு அறிக்கை குடுத்துட்டு இருக்காங்க பா...
''இதுல, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருக்கும், அதிகாரப்பூர்வ உளவுத்துறை போலீசாரை மீறி, ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருத்தர், 'சர்வே' பணிகள்ல ஈடுபட்டிருக்காரு...
''இவர், அ.தி.மு.க.,வுக்கு சாதகமானவர் என்பதால, தொகுதியில் அ.தி.மு.க., பலவீனமா இருக்குற இடங்களை கண்டுபிடிச்சு, அதை சரி செய்றது எப்படின்னு, அவங்களுக்கு ஆலோசனை குடுக்கிறாரு பா...
''இவர் தரும் தகவல்கள் எல்லாம், இப்ப பணியில் இருக்கும் உளவுத்துறை எஸ்.ஐ., ஒருத்தர் மூலமா, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு போயிடுது...
''இது, சமீபத்துல தான் திருவெறும்பூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுக்கு தெரியவந்திருக்கு... திருவெறும்பூர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தொகுதிங்கிறதால, அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு புகார் பண்ணியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''சோமசுந்தரம், ராஜா வரா... பில்டர் காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
