PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM

“கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா கள்ள கணக்கு காட்டியிருக்கா ஓய்...” என்ற பரபரப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.
“என்ன விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கு... 1959ல் துவங்கிய இந்த பள்ளியில், ஆறாம் வகுப்புல இருந்து பிளஸ் 2 வரைக்கும், 308 மாணவர்கள் படிக்கறா ஓய்...
“பள்ளி வளாகத்துலயே மாணவர்கள் தங்கறதுக்கு சமூக நீதி விடுதியும் இருக்கு... தலா ஒரு வார்டன், இரவு காவலர், துாய்மை பணியாளர், இரண்டு சமையலர்கள் வேலை பார்க்கறா ஓய்...
“விடுதியில், 55 மாணவர்கள் தங்கியிருக்கறதா வருகை பதிவேடுல இருக்கு... ஆனா, அஞ்சு வருஷங்களா ஒரு மாணவர் கூட தங்கவே இல்ல... இங்க வேலை பார்க்கறவாளுக்கு மாத ஊதியமா, 4.30 லட்சம் ரூபாய் செலவாறது ஓய்...
“இதனால, 'விடுதியில் மாணவர்களே இல்லாததால, ராத்திரி நேரங்கள்ல சமூக விரோத செயல்கள் நடக்கறது... அதுவும் இல்லாம, அவாளுக்கான உணவு செலவுன்னு கணக்கு காட்டி, அஞ்சு வருஷத்துல பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கு... இது சம்பந்தமா கலெக்டர் விசாரிக்கணும்'னு அந்த பகுதி மக்கள் எல்லாம் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“பறிமுதல் செஞ்சதை மறைச்சிட்டாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு பகுதி, கேரள எல்லையில் இருக்கு... இங்க, சமீபத்துல மண்ணுக்கு அடியில் புதைச்சு வச்சிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா; 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் பண்ணி, ரெண்டு பேரை கைது செஞ்சாங்க பா...
“ஆனா, கஞ்சாவை மட்டும் பறிமுதல் செஞ்சதா பத்திரிகைகளுக்கு தகவல் தந்தாங்க... கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் விஷயத்தை மறைச்சிட்டாங்க பா...
“அதோட, பறிமுதல் செஞ்சதை படம், வீடியோ எடுக்கவும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கல... இதனால, போலீசார் மீது சந்தேகமா இருக்குது பா...” என்றார் அன்வர்பாய்.
“மணல் கடத்தலுக்கு பச்சைக்கொடி காட்டிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“விளக்கமா சொல்லுங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“திருச்சி மாவட்டம், 'நம்பர் 1 டோல்கேட்' பகுதி கொள்ளிடம் ஆத்துல, மணல் கடத்தல் அமோகமா நடக்கு... இதுக்கு தனிப்பிரிவு போலீசார் இருவர், எஸ்.பி.,யிடம் உதவியாளரா இருக்கும் போலீஸ்காரர்னு மூணு பேர் ஆதரவா இருக்காவ வே.. .
“சமீபத்துல மணல் கடத்துறதுல ஏற்பட்ட கோஷ்டி மோதல்ல ஒரு குரூப், இன்னொரு குரூப்பின் மணல் லாரிகளை பிடிச்சு வச்சு தகராறுல ஈடுபட்டுச்சு... தகவல் கிடைச்சு கொள்ளிடம் போலீஸ் அதிகாரியும், மாமூல் போலீசார் மூணு பேரும் அங்க வந்துட்டாவ...
“அப்ப தனிப்பிரிவு போலீசார், 'நாங்க எஸ்.பி.,யிடம் பேசிட்டோம்... நாங்க சொல்ற நாட்கள்ல நீங்க தனித்தனியா மணல் அள்ளிக்கலாம்'னு பஞ்சாயத்து பேசி, லாரிகளை விடுவிச்சிட்டாவ... 'தி.மு.க., ஆட்சியில் நடந்த மணல் கொள்ளை இந்த ஆட்சியிலும் தொடருதே'ன்னு, அந்த பகுதி மக்கள் எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“அன்பு, ரமேஷ், சத்தியமூர்த்தி, பழனியப்பன்னு எல்லாரும் ஒண்ணா வராளே... இன்னைக்கு மழை வந்தாலும் வரும் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
