/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' தள்ளிவிடும் ' தனிப்படையினரால் புலம்பும் போலீசார்!
/
' தள்ளிவிடும் ' தனிப்படையினரால் புலம்பும் போலீசார்!
' தள்ளிவிடும் ' தனிப்படையினரால் புலம்பும் போலீசார்!
' தள்ளிவிடும் ' தனிப்படையினரால் புலம்பும் போலீசார்!
PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “இவரை மாத்திடுங்கன்னு கடிதமே எழுதிட்டாருங்க...” என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“மாவட்ட கலெக்டர்களுக்கு துறைவாரியா உதவியாளர்கள் இருப் பாங்கல்ல... பெரம்பலுார் கலெக்டருக்கு, சத்துணவு திட்ட உதவியாளர் ஒருத்தர் இருக்காருங்க.. .
“இவர் சரியா ஆபீஸ் வர்றதில்ல... வந்தாலும், 'புல் மப்பு'ல தான் இருக்காரு... சத்துணவு மையங்களுக்கு ஆய்வுக்கு போனாலும், 'கட்டிங்' வசூல் பண்றாரு... எப்பவும் போதையில் இருக்கிறதால, இவரது மேஜையில பைல்கள் தேங்கி கிடக்குதுங்க...
“பலமுறை எச்சரிக்கை பண்ணியும் இவர் திருந்தாததால, 'இவரை இங்க இருந்து மாத்திடுங்க'ன்னு, அவரது துறையின் தலைமை அதிகாரிகளுக்கு, கலெக்டர் கடிதமே அனுப்பிட்டாருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“கமலக்கண்ணன், தள்ளி உட்காரும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “எந்த வசதியும் இல்லன்னு புலம்புதாவ வே...” என்றார்.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“தேர்தல் நெருங்குறதால, 'சென்னை புறநகர்ல இருக்கும், 20க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகள்ல, எந்த குற்றங்களும் நடக்கக்கூடாது... குறிப்பா, சட்டம் - ஒழுங்கு பிரச்னையே வரக்கூடாது'ன்னு போலீசாருக்கு வடக்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காவ வே...
“ஆனா, ஏ.சி.,க்கள், இன்ஸ்பெக்டர் தவிர மற்ற போலீசார்கிட்ட, 'வாக்கி டாக்கி'யே இல்ல... கடந்த நாலு வருஷமா புதுசா வாக்கி டாக்கிகளே வாங்கலையாம்... இப்ப இருக்கிற கருவிகளும் பழுதாகி, சரியா வேலை செய்ய மாட்டேங்குது வே...
“பெரும்பாலான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு தனியா ஜீப்பும் இல்ல... அவசர வேலையா போகணும்னா, 'கால் டாக்சி' அல்லது ஆட்டோ பிடிச்சுதான் ஓடுதாவ... 'இந்த லட்சணத்துல எங்க இருந்து குற்றங்களை தடுக்கிறது'ன்னு புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“என்கிட்டயும் போலீசார் புலம்பல் ஒண்ணு இருக்கு ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“மும்பையில் இருந்து சென்னைக்கு வர்ற விரைவு ரயில்கள்ல, பல இளைஞர்கள் போதை மாத்திரைகளை கடத்திண்டு வரா... இந்த கடத்தலை தடுக்க, தனிப்படை எஸ்.ஐ., மற்றும் போலீசார்னு, 10 பேர் அடங்கிய குழுவை ஐ.ஜி., அமைச்சிருக்கார் ஓய்...
“இந்த குழு ரயில்கள்ல சோதனை நடத்தி, போதை மாத்திரைகள் கடத்தும் இளைஞர்களை கைது பண்ணி, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கும்...
“பெரும்பாலும் இந்த கடத்தல் நபர்களை, திருத்தணி போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சுடறா... அந்த ஸ்டேஷன் போலீசாரோ, 'எங்களுக்கே ஏகப்பட்ட வேலைகள் இருக்கு... இதுல, வாரத்துல நாலஞ்சு நாள் போதை கடத்தல் இளைஞர்களை கொண்டு வந்து விடறா...
“அவா மீது வழக்கு பதிவு பண்றது, மருத்துவ பரிசோதனைக்கு அழைச்சுண்டு போறது, நீதிமன்றத்துல ஆஜர்படுத்தி, புழல் ஜெயில்ல அடைக்கறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு... இதுக்கு செலவும் நிறைய ஆறது...
“ஐ.ஜி., தனிப்படை போலீசார், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல போதை கடத்தல் நபர்களை பிடிச்சாலும், அந்த ஊர் ஸ்டேஷன்ல ஒப்படைக்காம, இங்க கொண்டு வந்து தள்ளிடறா... இதனால, எங்களுக்கு தான் நாக்கு தள்றது'ன்னு புலம்பறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.