/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாலியல் புகார்தாரரை பகிரங்கப்படுத்திய போலீசார்!
/
பாலியல் புகார்தாரரை பகிரங்கப்படுத்திய போலீசார்!
PUBLISHED ON : மே 04, 2025 12:00 AM

நண்பர்கள் மத்தியில் அமர்ந்தபடியே, “ஓ.எஸ்.ஆர்., நிலங்கள்ல மோசடி நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த ஊர் மாநகராட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருநெல்வேலியில் காருண்யா நகர், ராஜராஜேஸ்வரி நகர், மேலப்பாளையம் பகுதியில வீட்டுமனைகள் வித்தவா, பொது பயன்பாட்டுக்கான ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மாநகராட்சியிடம் ஒப்படைச்சிருக்கா...
“பொதிகை நகர் பகுதியில், இப்படி ஒப்படைக்கப்பட்ட 11 சென்ட் நிலத்தை, சில மோசடி பேர்வழிகள் மேலப்பாளையம் பத்திரப்பதிவு ஆபீஸ்ல, போலி பத்திரப்பதிவு பண்ணிஅபகரிச்சுட்டா ஓய்...
“ராஜராஜேஸ்வரி நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்கள்ல, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மோசடி நபர்கள் ஆக்கிரமிச்சிருக்கா... இதை தடுத்து, ஓ.எஸ்.ஆர்., நிலங்கள்ல பூங்கா அல்லது நுாலகம் அமைத்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கமிஷனர் சுகபுத்ரா, எதையும் கண்டுக்காம இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“என்னை மாத்தவே முடியாதுன்னு சவால் விடுதாரு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்துார்ல தலைமை செயலக காலனி இருக்குல்லா... இங்க மின்வாரிய அதிகாரி ஒருத்தர், 'ஆன்லைன்' பண பரிவர்த்தனையான, 'ஜி பே' மூலமா வசூல் வேட்டை நடத்திட்டு இருந்தாரு வே...
“இது பத்தி, போன மார்ச் மாசமே நாம பேசியிருந்தோம்... இதை பார்த்ததும், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினாவ... ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, காப்பாத்தி விட்டுட்டாவ வே...
“இதனால, துணிச்சலான அதிகாரி, இப்ப வசூல் வேட்டையை தீவிரப்படுத்திட்டாரு... இப்பல்லாம், வசூலுக்கு தன் மொபைல் போனை பயன்படுத்தாம, தினமும் வெவ்வேறு ஊழியர்களின் மொபைல் போனை பயன்படுத்திக்கிடுதாரு வே...
“தனியார் வசதிக்காகமின் கம்பங்களை இஷ்டத்துக்கு இடம் மாத்தி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதாரு... யாராவது, 'உங்க மேல புகார் செய்வோம்'னு சொன்னா, 'எங்க துறை அமைச்சரை கூட மாத்திட்டாவ... ஆனா, என்னை மாத்தவே முடியாது'ன்னு தெனாவெட்டா சொல்லுதாரு வே...” என்றார், அண்ணாச்சி.
“வேலுசாமி டீ சாப்பிடுங்க...” என, நண்பரை உபசரித்த அந்தோணிசாமியே, “புகார் குடுத்த வங்களை காட்டி குடுத்துட்டாங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது பண்ணி, ஜெயில்ல அடைச்சாங்க... ஜாமின்ல வந்து, மறுபடியும் அந்த பெண்ணிடம் தகராறு பண்ணியவர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க...
“இந்த சம்பவத்துல, குற்றவாளிக்கு ஆதரவா போலீசார் செயல்படுறதா, நெல்லை சரக டி.ஐ.ஜி., யிடம் இளம்பெண் தரப்புல புகார் குடுத்திருந்தாங்க... இதுக்கு துாத்துக்குடி எஸ்.பி., ஆபீஸ்ல இருந்து ஒரு மறுப்பு அறிவிப்பு வெளியிட்டாங்க...
“அந்த அறிவிப்புல, புகார் தந்த பெண் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டிருந்தாங்க... 'பாலியல் புகார் அளிக்கும் பெண், அவங்க குடும்பம், பணிபுரியும் நிறுவனம் குறித்த எந்த விபரங்களையும் வெளியிட கூடாது'ன்னு நீதிமன்றமே உத்தரவு போட்டிருந்தும், போலீஸ் அதிகாரிகள் கண்டுக்கலைங்க...
“மாறி மாறி புகார் குடுக்கிற தன்னை பழிவாங்கும் வகையில் போலீசார் இப்படி பண்றதா, அந்த பெண் தரப்புல மகளிர் ஆணையத்திடம் புகார் குடுத்திருக்காங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

