தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பொய் புகாரை வாபஸ் வாங்க போலீஸ் அதிகாரி தடை!

 பொய் புகாரை வாபஸ் வாங்க போலீஸ் அதிகாரி தடை!

 பொய் புகாரை வாபஸ் வாங்க போலீஸ் அதிகாரி தடை!


PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பொதுமக்களை அலைய விடுறாங்க பா...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, பீடம்பள்ளி வி.ஏ.ஓ.,வா ஒரு பெண் இருக்காங்க... பட்டா மாறுதல் கேட்டு, 'ஆன்லைன்'ல வர்ற விண்ணப்பங்களை நிராகரிக்கிறதே இவங்களது பொழுதுபோக்கா இருக்குது பா...

“விதிமுறைப்படி, 5 சதவீதம் விண்ணப்பங்களை தான் நிராகரிக்கலாம்... ஆனா, அதை எல்லாம் கண்டுக்காம நிறைய விண்ணப்பங்களை இந்தம்மா நிராகரிச்சிடுறாங்க பா...

“கேட்டா, 'முறையான ஆவணங்கள் இணைக்கல'ன்னு சொல்றாங்க... பல முறை அலைஞ்சு அவங்களை நேர்ல பார்த்து, 'கவனிப்பு' பண்ணிட்டா விண்ணப்பத்தை, 'ஓகே' பண்ணிடுறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“லோயநாயகி மேடம்... அப்பறமா பேசறேன்...” என மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “ஐ.பி.எஸ்., அதிகாரியை கண்டு பயப்படறா ஓய்...” என்றார்.

''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.

“தி.மு.க., ஆட்சியில் முக்கிய பதவிகள்ல இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி, அந்த கட்சி தலைமைக்கு ரொம்பவே விசுவாசமா இருந்தார்... 'த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கும் அவர் நிறைய முட்டுக்கட்டை போட்டார்'னு அந்த கட்சியினரே குற்றம் சாட்டிண்டு இருந்தா ஓய்...

“ஆனா, இந்த ஆட்சியிலும் மிக முக்கியமான பதவிக்கு அந்த அதிகாரி வந்துட்டார்... இதனால, 'அந்த அதிகாரி, த.வெ.க., ஆதரவாளரா மாறிட்டார்... அதனால தான் அவருக்கு முக்கியமான பதவி குடுத்துட்டதா நாம அரசியல் செய்யலாம்'னு தி.மு.க., நிர்வாகிகள் சிலர், கட்சி தலைமையிடம் சொல்லியிருக்கா ஓய்...

“தி.மு.க., தலைமையோ, 'அவரை பத்தி வாயே திறக்காதேள்'னு கட்சியினருக்கு உத்தரவு போட்டுடுத்து... ஏன்னா, தலைமை குடும்பத்தின் சகல விஷயங்களும் அந்த அதிகாரிக்கு தெரியுமாம்... அதனால, 'அவரை தேவையில்லாம சீண்ட வேண்டாம்'னு கட்சியினருக்கு கடிவாளம் போட்டுட்டா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“அருண், இந்த போலீஸ் அதிகாரி மேட்டரையும் கேட்டுட்டு கிளம்பும் வே...” என நண்பரை இழுத்து பிடித்த பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“ராமதாஸ் அணி பா.ம.க.,வில், துணை தலைவரா இருக்கிறவர் சுப்பிரமணியன்... ரெண்டு வருஷத்துக்கு முந்தி இவர், திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க., நிர்வாகி சிங்காரவேலுவின் மனைவி வேதநாயகிக்கு, 15 லட்சம் ரூபாய் கடன் குடுத்திருக்காரு வே...

“இதை திருப்பி தராம இழுத்தடிச்சதால நீதிமன்றத்துல வழக்கு போட்டதுல, 15 லட்சத்தை திருப்பி தரும்படி உத்தரவு போட்ட நீதிபதி, வேதநாயகிக்கு ரெண்டு வருஷம் சிறை தண்டனையும் விதிச்சாரு வே...

“ஆனாலும், சுப்பிரமணியனுக்கு பணம் தராத சிங்காரவேலு, தன் ஆதரவாளர் மைக்கேல்ராஜ் என்பவரை வச்சு, ஜாதி பெயரை சொல்லி திட்டியதா சுப்பிரமணியன் மீது திருத்துறைப்பூண்டி போலீஸ்ல புகார் குடுக்க வச்சுட்டாரு...

“அப்புறமா ஊர் பெரியவர்கள் எல்லாம் தலையிட்டு, 'பொய் புகாரை வாபஸ் வாங்கு'ன்னு மைக்கேல் ராஜிடம் சொல்லியிருக்காவ... அவரும் புகாரை வாபஸ் வாங்க போனப்ப, 'உங்க இஷ்டத்துக்கு புகார் தந்துட்டு வாபஸ் வாங்க அனுமதிக்க முடியாது'ன்னு பெண் போலீஸ் அதிகாரி மறுத்துட்டாங்க வே...” என முடித்தார் அண்ணாச்சி.

“பவானி மேடத்துக்கு பேசணும்...” என முணுமுணுத்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us