/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதல்வர் உத்தரவை மதிக்காத போலீஸ் அதிகாரிகள்!
/
முதல்வர் உத்தரவை மதிக்காத போலீஸ் அதிகாரிகள்!
PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''கட்டப்பஞ்சாயத்து செஞ்ச தி.மு.க., பிரமுகரை கைது பண்ணல பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், ஆத்துார் பக்கத்துல இருக்கிற அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த, பிளஸ் 1 மாணவர்கள் மூணு பேரை கைது பண்ணி, கூர்நோக்கு இல்லத்துல அடைச்சாங்க... இந்த விவகாரத்தை முதல்ல, போலீசாருக்கு தெரியாம மறைச்ச தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைன்னு மூணு பேரை கைது செஞ்சாங்க பா...
''இந்த பிரச்னையில், 'கட்டப்பஞ்சாயத்து' பேசிய தி.மு.க., பிரமுகரான பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் ஜோதி மீது நடவடிக்கை எடுக்கணும்னு அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் புகார் சொன்னாங்க... இதனால, ஜோதிக்கு ஆத்துார் போலீசார் சம்மன் அனுப்பி, விசாரணைக்கு கூப்பிட்டாங்க பா...
''இதன்படி ஆஜரான அவரிடம் விசாரணை நடத்திட்டு அனுப்பிட்டாங்க... ஆசிரியர்களை கைது செஞ்ச போலீசார், ஜோதி ஆளுங்கட்சிக்காரர் என்பதால, கைது பண்ணாம விட்டுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆட்டம் ஓவரா இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துல ஒரு அதிகாரி இருக்கார்... ஊராட்சிகள்ல என்ன வேலை நடந்தாலும் இவரை, 'கவனிச்சா' தான், 'பில் பாஸ்' ஆகும் ஓய்...
''அதிகாரியை ஊராட்சி செயலர்கள் மாதாமாதம் கவனிக்கலைன்னா, அவாளை வறுத்து எடுத்துடறார்... எந்த பில் வச்சாலும், 10 முதல் 20 பர்சன்ட் வரை கமிஷன் வெட்டினா தான் இவரிடம் காரியம் நடக்கும் ஓய்...
''கிராம சபை கூட்டம் நடத்த, 5,000 ரூபாய் செலவு பண்ண லாம்... இதுக்கான பில்லை ஊராட்சி செயலர்கள் நீட்டினா, 'இவ்வளவு செலவு பண்ணி என்னத்த கிழிச்சே'ன்னு கேட்டு, பில்லை நிறுத்தி வச்சுடறார் ஓய்...
''இவரது மனைவி, நெடுஞ்சாலை துறையில் பெரிய ஆபீசரா இருக்காங்க... கணவருக்கு ஏதாவது பிரச்னை வந்தா, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,விடம் பேசி காப்பாத்தி விட்டுடறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செல்வகுமார் தள்ளி உட்காரும்...'' என்ற அந்தோணிசாமி, ''முதல்வர் உத்தரவையே மதிக்கலைங்க...'' என்றார்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை, அடையார் போக்குவரத்து போலீஸ் பெண் அதிகாரி, மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்புல இருக்காங்க... இங்க வாகனம் நிறுத்துறது தொடர்பா, அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியுடன் தகராறு நடந்து, பெண் அதிகாரியை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க...
''அவங்க வீட்டையும் காலி பண்ண சொல்லி, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தரப்புல இருந்து, 'பிரஷர்' வந்துச்சுங்க... இந்த சூழல்ல, 'பெண் அதிகாரிக்கு மீண்டும் பணி வழங்கணும்'னு எம்.எல்.ஏ., ஒருத்தர், முதல்வரிடம் பரிந்துரை பண்ணி, சஸ்பென்ஷனை ரத்தும் பண்ணிட்டாங்க...
''ஆனாலும், அவங்களுக்கு எந்த பணியிடமும் ஒதுக்காம, காத்திருப்போர் பட்டியல்ல வச்சிருக்காங்க... பெண் அதிகாரி ஓய்வு பெற இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கு...
''இத்தனைக்கும், அவங்க கணவர், மகன் கூட போலீஸ் அதிகாரிகளா தான் இருக்காங்க... குடும்பமே போலீஸ் துறையில் இருந்தும், அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தர்ற நெருக்கடியால, பெண் அதிகாரி மன உளைச்சல்ல தவிக்கிறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.