தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வேட்பாளர்களுக்கு உளவு தகவல் தரும் போலீஸ் அதிகாரிகள்!

 வேட்பாளர்களுக்கு உளவு தகவல் தரும் போலீஸ் அதிகாரிகள்!

 வேட்பாளர்களுக்கு உளவு தகவல் தரும் போலீஸ் அதிகாரிகள்!


PUBLISHED ON : ஏப் 15, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சு க்கு காபியை பருகியபடியே, ''தன்னால தான் அதிகாரிகளை மாத்திட்டாங்கன்னு சொல்லுதாரு வே...'' என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''சென்னை துறைமுகம் தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் சேகர்பாபு, அ.தி.மு.க., சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுதாவ... மனோ சமீபத்துல தேர்தல் கமிஷனுக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தாரு வே...

''அதுல, 'துறைமுகம் தொகுதியில், ரவுடிகள் மூலமா வன்முறையை துாண்டி விட்டும், போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடனும், ஆளுங்கட்சியினர் தேர்தல் முறைகேடுல ஈடுபட முயற்சி பண்ணுதாவ... அதனால, சென்னையில சில போலீஸ் அதிகாரிகளை மாத்தினா தான், தேர்தல் நியாயமா நடக்கும்'னு குறிப்பிட்டிருந்தாரு வே...

''இவர் புகாரால நடந்துச்சா, இல்லையான்னு தெரியல... ஆனா, தலைமை செயலர், உள்துறை செயலர் மற்றும் பல போலீஸ் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் அதிரடியா மாத்திட்டுல்லா... இதனால, 'என் புகாரை பார்த்து தான், எல்லாரையும் மாத்திட்டாவ'ன்னு, தன் கட்சியினரிடம் மனோ பெருமை அடிச்சுக்கிடுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஏடாகூடமா பேசி மாட்டிக்கிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சட்டசபை தொகுதியில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பல குழுக்களை அமைச்சிருக்காங்க... இந்த குழுக்கள்ல, வருவாய் மற்றும் போலீஸ் துறையினர் இருக்காங்க பா...

''இந்த குழுவுல இருந்த ஒரு பெண் அதிகாரியிடம், போலீஸ் ஏட்டு ஒருத்தர் அடிக்கடி இரட்டை அர்த்தத்துல பேசியிருக்காரு... உடனே, அவங்க, தொகுதியின் தேர்தல் அதிகாரியான, சப் - கலெக்டர் கவுதமியிடம் புகார் பண்ணவும், அந்த ஏட்டை தேர்தல் பணி குழுவுல இருந்து உடனே நீக்கிட்டாங்க பா...

''இது சம்பந்தமா, ஏட்டை விசாரணைக்கு கூப்பிட்டப்ப, அவர் மயங்கி விழுற மாதிரி நாடகமாடியிருக்காரு... பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் புகார் வாங்கி, நடவடிக்கை எடுத்தா பிரச்னை பெருசாகும்கிறதால, அதிகாரிகள் இந்த விஷயத்துல அடக்கி வாசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பாலசுப்பிரமணியன், இதையும் கேட்டுண்டு கிளம்பும்...'' என, நண்பரை இழுத்து பிடித்த குப்பண்ணா, ''வேட்பாளர்களுக்கு உளவு சொல்லிண்டு இருக்கா ஓய்...'' என்றார்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை சிட்டி போலீசில் மட்டும், 10க்கும் மேற்பட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தேர்தல் நேர இடமாறுதல் இல்லாம, பழைய இடங்கள்லயே பணியில நீடிக்கறா... இவா எல்லாம், தங்களது உயர் அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை சரியா சொல்றாளோ, இல்லையோ, தி.மு.க., வேட்பாளர்களுக்கு தொகுதி நிலவரங்களை தினமும் சொல்லிடறா ஓய்...

''அதாவது, தொகுதியில் நிலவும் சாதக, பாதகங்களை எடுத்து சொல்லி, வேட்பாளர்களை உஷார்படுத்தறா... இன்னும் சில இன்ஸ்பெக்டர்கள், சென்னையில் போட்டியிடற வசதியான, த.வெ.க., வேட்பாளர்களுக்கும், தொகுதி நிலவரங்களை கண்காணிச்சு தகவல்கள் தரா ஓய்...

''இதுக்கு பிரதிபலனா, வேட்பாளர்களிடம் இருந்து, இன்ஸ்பெக்டர்களுக்கு லட்சக்கணக்குல பணம் கைமாறுகிறது... இது பத்தி, டி.ஜி.பி., ஆபீசுக்கும் நிறைய புகார்கள் போயிருக்கறதால, அவாளை மாத்தறதுக்கான ஏற்பாடுகள் நடக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us