/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலீசில் புகார் கொடுக்க பயப்படும் பொதுமக்கள்!
/
போலீசில் புகார் கொடுக்க பயப்படும் பொதுமக்கள்!
PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

''மாற்று கட்சியில இருந்தாலும், நட்போடு நலம் விசாரிச்சிருக்காரு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக பா.ஜ., செயலரும், சென்னையின் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன், ஒருகாலத்துல தி.மு.க.,வையும், ஸ்டாலினையும் கடுமையா விமர்சனம் செஞ்சாரு... நாகாலாந்து கவர்னரா இருக்கிற இல.கணேசனின் அண்ணன் கோபாலன் சமீபத்துல காலமானாரே...
''சென்னை, தி.நகர்ல இருந்த கோபாலன் வீட்டுக்கு போய், முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாரு... அப்ப, அங்க நின்னுட்டு இருந்த தியாகராஜனை பார்த்து, கையை பிடிச்சு நலம் விசாரிச்சிருக்காரு... 'ஒருநாள் வீட்டுக்கு வாங்க'ன்னும் அழைப்பு விடுத்திருக்காரு பா...
''அரசியலுக்கு அப்பாற்பட்டு, பழசை மனசுல வச்சுக்காம தன்னிடம் பேசியதும் அல்லாம, தன் இதய அறுவை சிகிச்சை குறித்தும் அக்கறையோட முதல்வர் கேட்டதுல, தியாகராஜன் நெகிழ்ந்து போயிட்டாரு... இதனால, தனிப்பட்ட முறையில முதல்வரை சந்திச்சு பேச, தன் கட்சி மாநில தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி கேட்டிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தொல்லை விட்டதுன்னு ப்ரீயா இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம பஞ்சாயத்துகள் இருக்கு... இங்க இருந்த பஞ்., தலைவர்கள் சரியா அலுவலகம் வரவே மாட்டா ஓய...
''அவாளிடம் வீடு தேடி போய், பஞ்., செயலர்கள் கையெழுத்து வாங்கிண்டு இருந்தா... சில தலைவர்கள், ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்துல நடக்கற பணிகளை டெண்டர் எடுத்தும் செய்தா ஓய்...
''இதுக்கான பில் தொகை வாங்கறது உள்ளிட்ட வேலைகளுக்கு செயலர்களை ஏவிண்டு இருந்தா... அதே மாதிரி, பெண்கள் பதவி வகித்த பஞ்சாயத்துகள்ல, கணவர்கள் நிர்வாகத்துல தலையிட்டு, செயலர்களை படுத்தி எடுத்துண்டு இருந்தா... போன 5ம் தேதியோட பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்துட்டதால, 20 ஊராட்சி செயலர்களும் நிம்மதியா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''புகார் குடுக்கவே பயப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எதுக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தாம்பரம் கமிஷனர் அலுவலகம் கட்டுப்பாட்டுல வர்ற, கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவுல ஒரு ஏட்டு இருக்கார்... இவரிடம் புகார் குடுக்க வர்ற ரெண்டு தரப்பினரிடமும் புகார்களை வாங்கிட்டு, அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறது இல்லைங்க...
''அதுக்கு மாறா, ரெண்டு தரப்பினரிடமும் பணத்தை வாங்கிட்டு, 'ஆக் ஷன் டிராப்' என்ற முறையில், 'பஞ்சாயத்து' பேசி வழக்கை முடிச்சு வச்சிடுறாரு... அதுவும் இல்லாம புகார்தாரர்களை போன்ல தொடர்பு கொண்டு, 'நான் இந்த கடையில இருக்கேன், வாங்க'ன்னு கூப்பிடுறாருங்க...
''அப்படி வர்றவங்களிடம், அந்த கடையில,தான் வாங்கிய பொருட்களுக்கான பில் தொகையை தரும்படி நிர்பந்தம் பணறாருங்க... அதுவும் இல்லாம, திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரிய நபர்களிடம் வழங்கவும் பெரும் தொகையை வசூலிக்கிறாருங்க... இதனால, குற்றப்பிரிவுல புகார் குடுக்கணும்னாலே, பொதுமக்கள் பயப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.