PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

“இன்னொரு வாரிசு களமிறங்க போறாரு பா...” என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் அன்வர்பாய்.
“எந்த கட்சியில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“அ.தி.மு.க., பொதுச்செயலரா பழனிசாமி இருக்காரே... இவரது தலைமையில் கட்சி, 11 தோல்விகளை சந்திச்சிருக்குது பா...
“இதனால, அவர் மீது அதிருப்தியானவங்க, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை யில் தனி அணியா பிரிஞ்சு, பழனிசாமிக்கு எதிரா குரல் குடுத்தாங்க... ஆனாலும், அவங்க முயற்சி தோற்று போய், பழனிசாமியிடமே, 'சரண்டர்' ஆகிட்டாங்க பா...
“இனி, பழனிசாமி தலைமைக்கு எதிரா யாரும் கேள்வி எழுப்ப முடியாத சூழல் உருவாகிடுச்சு... இதனால, சில வருஷங்களா திரைமறைவில் கட்சி பணிகள்ல ஈடுபட்ட தன் மகன் மிதுனை, நேரடி அரசியல்ல களம் இறக்க பழனிசாமி முடிவெடுத்திருக்காரு பா...
“அவரை நேரடி அரசியலுக்கு தயார்படுத்தும் பணியை, தனக்கு நெருங்கிய, சேலம் மாவட்டச் செயலர் ஒருத்தரிடம் பழனிசாமி குடுத்திருக்காரு... வர்ற அக்டோபர் 17ல், கட்சியின் ஆண்டு விழா சமயத்துல, அவரது வாரிசு நேரடி அரசியல்ல குதிக்க இருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.
“பாலியல் புகார்களை மூடி மறைச்சுட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில், வேலை பார்க்கற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படறதா, சென்னையில் இருக்கற போக்குவரத்து கழக உயர் அதிகாரிக்கு புகார் கடிதம் வந்திருக்கு... இது சம்பந்தமா, கும்பகோணம் கோட்ட அலுவலகத்துல, சமீபத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கா ஓய்...
“ஆனா, இந்த விசாரணையே, புகார்ல சிக்கிய அதிகாரிகளை காப்பாற்றும் வகையில தான் நடந்திருக்கு... 'எங்களுக்கு எந்த பாலியல் தொல்லையும் நடக்கல'ன்னு ஒரு கடிதம் தயார் பண்ணி, அதுல பெண் ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிண்டு அதிகாரிகள் கிளம்பிட்டா ஓய்...
“இதனால, பெண் ஊழியர்கள் எல்லாம் நொந்து போயிருக்கா... 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் இங்க அனுப்பி விசாரிக்க சொல்லணும்'னு புலம்பிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“ஊழல் கொடி கட்டி பறக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்துக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள், சுற்றுலா பயணியர் வர்றாங்கல்லா... இங்க, 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் இருக்கு வே...
“இதுல, 50க்கும் மேற்பட்ட விடுதிகள் கடந்த மூணு வருஷத்துல புதுசா உருவாகியிருக்கு... தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட இந்த விடுதிகளுக்கு சாதகமா, நகராட்சி அதிகாரிகள் செயல்படுதாவ வே...
“அதாவது, விடுதிகள்ல தங்கும் அறைகளின் எண்ணிக்கையை குறைச்சு காட்டி வரி வசூல் பண்ணுதாவ... புதிய விடுதி, ஹோட்டல்கள் கட்ட, 'பிளான் அப்ரூவலுக்கு' குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் வாங்குதாவ வே...
“இதனால, நகராட்சி அதிகாரிகள் காட்டுல பணமழை கொட்டுது... இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நிறைய புகார்கள் போயிருக்கு வே...
“அவங்களும், நகராட்சி அலுவலகத்தை ரகசியமா கண்காணிச்சிட்டு இருக்காவ... கூடிய சீக்கிரம், அதிரடி நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டிருக்காவ வே...” என முடித்தார் அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
