/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பதவி உயர்வு பாரபட்சத்தால் வருவாய் துறையினர் வருத்தம்!
/
பதவி உயர்வு பாரபட்சத்தால் வருவாய் துறையினர் வருத்தம்!
பதவி உயர்வு பாரபட்சத்தால் வருவாய் துறையினர் வருத்தம்!
பதவி உயர்வு பாரபட்சத்தால் வருவாய் துறையினர் வருத்தம்!
PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

டபராவில் வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''முத்து குளிக்கிற மாதிரி, மணலை அள்ளிண்டு இருக்கா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் காவிரி ஆறு ஓடறது... இங்க, துடுப்பு படகு மூலமா நடு ஆத்துக்கு போற சிலர், தண்ணிக்குள்ள மூழ்கி மணலை அள்ளி, படகுல குவிச்சு கரைக்கு எடுத்துண்டு போறா ஓய்...
''கரையோரமா மணலை குவிச்சு, சல்லடை போட்டு சலித்து வித்துடறா... இது பத்தி, சங்ககிரி தாலுகா ஆபீஸ்ல யாராவது புகார் குடுத்தா, உடனே அங்க வருவாய் துறையினர் ஆஜராகிடறா ஓய்...
''மணல் திருடர்களிடம், 'கட்டிங்' வாங்கிட்டு கமுக்கமா நடையை கட்டிடறா... போறச்சே, தங்களுக்கு புகார் தந்தது யார்னு, 'போட்டு' குடுத்துட்டும் போயிடறா ஓய்...
''இதனால, புகார் குடுத்தவாளை மணல் கடத்தல் கும்பல் மிரட்டறது... வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சு தான் இதெல்லாம் நடக்கறதான்னு சந்தேகமா இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முறைகேட்டை மூடி மறைச்சுட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார்ல வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ற, 'எலைட்' கடை இருக்குது... இந்த கடை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கட்டுப்பாட்டுல வருது பா...
''இங்க, தினமும் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கும்... போன வருஷம் டிசம்பர் மாசம், இந்த கடையில டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தினப்ப, 1.50 கோடி ரூபாயை நிர்வாகத்துக்கு கட்டாம, ஊழியர்கள் முறைகேட்டுல ஈடுபட்டதை கண்டுபிடிச்சாங்க பா...
''இது சம்பந்தமா போலீஸ்ல புகார் குடுத்து, நடவடிக்கை எடுத்திருக்கணும்... ஆனா, அப்படி செய்யாம முறைகேடு தொகையை ஊழியர்களிடம் வசூலித்து, கணக்கை முடிக்க பார்க்கிறாங்க பா...
''இதுவரைக்கும், 75 சதவீத தொகையை வசூல் பண்ணிட்டாங்களாம்... மீதத்தையும் வசூல் பண்ணி, பிரச்னையை காதும் காதும் வச்ச மாதிரி முடிக்க பார்க்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வருவாய் துறையினர் புலம்புதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலமா அரசு பணியிடங்களை நிரப்புதாவ... இதுக்காக மாவட்ட வாரியா, ஒவ்வொரு  துறையிலும் உள்ள காலியிடங்கள் விபரத்தை முன்கூட்டியே கேட்டு வாங்கிடுவாவ வே...
''தேர்வு முடிஞ்சதும், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்களை நிரப்புதாவ... அதே நேரம், பதவி உயர்வை பொறுத்தவரைக்கும், டி.என்.பி.எஸ்.சி., மார்க் அடிப்படையில் தான் வழங்கணும்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருக்கு வே...
''பல துறைகள்ல இந்த உத்தரவை கடைப்பிடிச்சாலும், வருவாய் துறையில் மட்டும் பதவி உயர்வையும், இட ஒதுக்கீடு கோட்டாவுலயே வழங்குதாவ... இதனால, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுல அதிக மார்க் வாங்குனவங்க பதவி உயர்வு பாதிக்கப்படுது வே...
''இது சம்பந்தமா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வருவாய் துறையினர், ஐகோர்ட்ல வழக்கு போட்டு, நிவாரணம் தேடிக்கிட்டாவ... இதை பார்த்து, பிற மாவட்ட வருவாய் துறையினரும் வழக்கு போட தயாராகிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

