/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சாலையோர கடைகள் அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்
/
சாலையோர கடைகள் அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்
PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

அம்பத்துார்,அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதற்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை, சிட்கோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொழிற்பேட்டை பகுதியில் ஆங்காங்கே, சாலையோர உணவகங்களை வைத்து, சிலர் வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் சிட்கோவில் முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அவற்றை கடந்த சில தினங்களாக சிட்கோ நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வந்தது. அந்நேரம், அங்கிருந்த பொருட்களையும், அவர்கள் கொண்டு சென்றதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மதியம், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சி.டி.எச்., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.
பின், சிட்கோ அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினர். அதில், கடைகள் அகற்றும் நேரத்தில், கைப்பற்றப்பட்ட பொருட்களை திரும்பி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தொழிற்சாலை பகுதியில் சாலையோர கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் வைத்த கோரிக்கையை, உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என, சிட்கோ அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.