தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கிய முறைகேட்டில் அதிகாரி கலக்கம்!

 ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கிய முறைகேட்டில் அதிகாரி கலக்கம்!

 ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கிய முறைகேட்டில் அதிகாரி கலக்கம்!


PUBLISHED ON : செப் 15, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் அமர்ந்த கையுடன், “பதவி உயர்வு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கு பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“பொதுவா, மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், இளநிலை வரைதொழில் அதிகாரி எனும் ஜெ.டி.ஓ., பதவிக்கு, 'ஓவர்சீயர்' என்ற பணி மேற்பார்வையாளர் அந்தஸ்தில், ஒரு பொறியாளரை நியமிப்பாங்க... இவருக்கு பதவி உயர்வு வழங்குறப்ப, ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவி பொறியாளரா நியமிக்கப்படுவாரு பா...

“ஆனா, காஞ்சிபுரம் மாவட்டத்துல ஜெ.டி.ஓ.,வா இருந்த பெண் அதிகாரிக்கு, சமீபத்துல பதவி உயர்வு குடுத்து, மாவட்ட தலைமை அலுவலகத்துலயே, 'போஸ்டிங்' போட்டிருக்காங்க... அங்க இருக்கிற பெண் உதவி பொறியாளர் சிபாரிசுல தான், இப்படி விதிகளை மீறி பதவி உயர்வு தந்திருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “பாமா ருக்மணி மேடம்... தமிழரசிகிட்ட பேசிட்டு சாயந்தரமா போன் பண்றேன்...” என கூறி வைத்தபடியே, “டிஜிட்டல் முறையில லஞ்சம் வாங்கிட்டாங்க...” என்றார்.

“எந்த ஊருல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங் களைச் சேர்ந்த நிறைய பேர், நீலகிரியில இடம் வாங்கி வீடு கட்டுறாங்க... இங்க, கூட்டு பட்டாவா பெரும்பாலான நிலங்கள் இருக்குதுங்க...

“தங்களது நிலத்தை விற்பனை செய்ய விரும்புறவங்க, தனி பட்டா கேட்டு வருவாய் துறையிடம் விண்ணப்பிக்கிறாங்க... இதை வாங்கி தர்றதுக்காக புரோக்கர்கள் சிலரும் இருக்காங்க...

“சமீபத்துல, நிலத்துக்கு பட்டா கேட்டு, குந்தா தாசில்தார் அலுவலகத்துக்கு ஒரு புரோக்கர் போயிருக்காரு... அங்க இருந்த பெண் அதிகாரி, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 50 ஆயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்திருக்காங்க... அதையும் மொத்தமா வாங்காம, மொபைல் போன் பணப் பரிவர்த்தனை செயலியான, 'ஜி பே' மூலமா, வேற வேற நம்பர்களுக்கு அனுப்பச் சொல்லி, பட்டா, சிட்டா சான்றிதழ்களை குடுத்துட்டாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“வாரும் தினேஷ்... ஊர்ல ராஜேஸ்வரி சவுக்கியமா...” என விசாரித்த பெரியசாமி அண்ணாச்சி, “அதிகாரியின் கலக்கத்தை கேளுங்க வே...” என்றபடியே தொடர்ந்தார்...

“தி.மு.க., ஆட்சியின் கடைசி கட்டத்துல, அவசர அவசரமா 2,000 கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்கு, சட்ட சபையின் ஒப்புதல் பெறாமலே நிதி ஒதுக்கினாங்க... ஒப்பந்ததாரர்களுக்கு முன்பணமும் வழங்கி, 30 முதல் 35 சதவீதம் கமிஷனும் வாங்கிட்டாவ வே...

“இது சம்பந்தமான கோப்புகள்ல, உயர் அதிகாரி ஒருத்தரின் வாய்மொழி உத்தரவுப்படி, '2026 - 27ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டிலேயே அனுமதி அளிக்கப்படுகிறது'ன்னு அதிகாரிகள் எழுதியிருக்காவ... ஆனா, தேர்தல் முடிவுகள் தலைகீழா போய், 2,000 கோடி ரூபாய் திட்டங்களையும் த.வெ.க., அரசு ரத்து பண்ணிட்டுல்லா...

“அதுவும் இல்லாம, சட்டசபை ஒப்புதல் பெறாம 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது சம்பந்தமா, தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரும் குடுத்துட்டாரு வே...

“சட்டசபை உரிமை மீறல் குழு விசாரிக்கிறப்ப, அதிகாரிகள் பதில் சொல்லணும்... போதாக்குறைக்கு, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையும் விசாரிக்கும்னு தகவல்கள் பரவுறதால, வாய்மொழி உத்தரவு பிறப்பித்த அதிகாரி கலக்கத்துல இருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us