பல்கலைக்கழக நிர்வாகத்தில் பந்தாடப்படும் விதிகள்!
பல்கலைக்கழக நிர்வாகத்தில் பந்தாடப்படும் விதிகள்!
PUBLISHED ON : மார் 25, 2026 03:10 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''அதிகாரிகள் மத்தியில இணக்கமே இல்ல பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்துல, தேர்தல் வேலைகளை நிறைய அதிகாரிகள் இணைந்து பார்க்கிறாங்க... இவங்களுக்கு மத்தியில் சரியான தகவல் தொடர்பே இல்ல பா...
''தேர்தல் பணிகள்ல, 'விதிமுறைகளை கடுமையா பின்பற்றணும்'னு கலெக்டர் சினேகா கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காங்க... ஆனா, 'கலெக்டர் சொல்றதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்ல'ன்னு சொல்லிட்டு, சில அதிகாரிகள் ஏனோ தானோன்னு இருக்காங்க பா...
''இன்னும் சிலர், தேர்தல் பணியில நம்மை தள்ளிட்டாங்களேன்னு வேண்டா வெறுப்பா இருக்காங்க... இதை சரி செய்யலைன்னா, ஓட்டுப்பதிவு நாள்ல ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கும் பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகளுக்கு கறி விருந்து போட்டு அசத்திட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பத்திரப்பதிவு துறையில், ஒவ்வொரு வருஷமும் இலக்கு நிர்ணயம் பண்ணி, வருவாய் ஈட்டுவாவ... இந்த பணிகள் சம்பந்தமா, மாசம் ஒரு முறை, துறையின் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்கும் வே...
''கடந்த அஞ்சு வருஷமா நடந்த ஆய்வு கூட்டங்கள்ல, பெரும்பாலும் அதிகாரிகளுக்கு, அமைச்சரிடம் இருந்து, திட்டு தான் விழும்... சமீபத்தில், சென்னையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நடத்தியிருக்காரு வே...
''அப்ப, 'வருவாய் இலக்கை எட்டுறதுல இந்த முறை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு'ன்னு மூர்த்தி சந்தோஷப்பட்டிருக்காரு... அதோட, 'முந்தைய கூட்டங்கள்ல நான் கோபமா பேசியிருந்தா, யாரும் வருத்தப்படாதீங்க'ன்னு சொன்னவர், எல்லாருக்கும் கறி விருந்து குடுத்து அனுப்பியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்ல, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் இருக்கோல்லியோ... இங்க, 18 துறைகள் இருக்கு ஓய்...
''பல்கலை விதிகளின்படி, இந்த துறைகளின் தலைவர்கள் பல்கலையில் தான் பணியில் இருக்கணும்... ஆனா, கல்வி துறை தலைவர் - சென்னை, கணினி அறிவியல் தலைவர் - மதுரை, கணித தலைவர் - கோவை மையங்கள்ல பணியில இருக்கா ஓய்...
''இதனால, துறை தலைவர்களிடம் கையெழுத்து வாங்கறதுக்காக மாணவியர், அவா பணிபுரியும் மையங்களுக்கு வெட்டியா அலையறா... பல்கலையில், மூத்த பேராசிரியைகள் அஞ்சு பேர் இருக்கா ஓய்...
''ஆனாலும், பதிவாளர் பொறுப்புல இருக்கற பெண்மணி, மேலும் நாலு முக்கிய பதவிகளையும் கையில வச்சிருக்கா... ராத்திரியானா பல்கலையின் ஆண் ஊழியர்கள் மற்றும் கேன்டீன் ஊழியர்கள் சேர்ந்து, விடுதிக்கு வந்து மது அருந்தறா... இதை, விடுதி வார்டனும் கண்டுக்கறது இல்ல ஓய்...
''இதனால, 'பதிவாளரை மாத்தணும்... விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு கவர்னர் மற்றும் உயர் கல்வி துறை செயலருக்கு, மாணவியர் எல்லாம் புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''ஜெயபிரியா மேடமா... சொல்லுங்க...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
