/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அத்திக்கடவு திட்டத்தில் சொதப்பிய நிறுவனம்!
/
அத்திக்கடவு திட்டத்தில் சொதப்பிய நிறுவனம்!
PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

''இன்னும் சிலர் மேல நடவடிக்கை எடுக்கணும்னுசொல்லுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்கபா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கன்னியாகுமரியில்,ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வச்சதால, அ.தி.மு.க., அமைப்பு செயலர் மற்றும் மாவட்ட செயலர்பதவிகளை, தளவாய் சுந்தரத்திடம் இருந்து பழனிசாமி பறிச்சுட்டாருல்லா... 'இந்த அதிரடி தான் வேணும் தலைவா'ன்னு சமூக வலைதளங்கள்ல கட்சியினர் பதிவு போட்டுட்டுஇருக்காவ வே...
''அதுவும் இல்லாம,'எது நடந்தாலும் கேட்கநாதி இல்லன்னு, இஷ்டத்துக்கு ஆட நினைக்கும் கும்பலுக்கு கொடுத்த முதல் சவுக்கடி இது... இனிதான்ஆட்டம் ஆரம்பம்'னு போஸ்டரும் பதிவிட்டிருக்காவ... அதாவது, 'இன்னும் குறுநில மன்னர்களா வலம் வர்ற, பல முன்னாள் அமைச்சர்களின் கட்சி பதவிகளையும் பறிக்கணும்'னு தான், இப்படி பதிவு போட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கொறடா வாய்ப்பை கெடுத்துட்டார்னு புலம்புறாங்க...''என்ற அந்தோணிசாமியேதொடர்ந்தார்...
''அமைச்சரவை மாற்றத்தின்போது, பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரனுக்கு அரசு தலைமை கொறடா பதவி வழங்க, போக்குவரத்து துறை அமைச்சர்சிவசங்கர் உட்பட சிலசீனியர்கள், முதல்வரிடம்பரிந்துரை பண்ணி இருக்காங்க...
''ஏன்னா, எம்.எல்.ஏ.,வாஇருந்த உதயநிதியை அமைச்சராக்கணும், துணைமுதல்வராக்கணும்னு சட்டசபையில முதல்ல குரல் கொடுத்தது பிரபாகரன் தான்... அவரதுவாய் முகூர்த்தம் பலிச்சுட்டதால, அவரை கொறடாவாக்க உதயநிதியும், 'ஓகே' சொல்லி இருந்தாருங்க...
''ஆனா, பெரம்பலுார்மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டுல வச்சியிருக்கிற, 'மாஜி' மத்திய அமைச்சர், 'ஏற்கனவே மாவட்டத்துல ஒரு அமைச்சர் வலம் வர்ற நிலையில, இன்னொருத்தரும் அரசு கார்ல வலம் வந்தா, தன்னை யாரும் மதிக்க மாட்டாங்க'ன்னு நினைச்சு, தலைமையிடம் பேசி முட்டுக்கட்டை போட்டுட்டதா பிரபாகரன்தரப்பு புலம்புறாங்க...
''அதுவும் இல்லாம, மாஜி வெளியூர்லயே பாதி நாள் இருக்கிறதால,மாவட்டத்தை கண்காணிக்கவசதியா, அடுத்த சட்டசபை தேர்தல்ல, தன் அக்கா மகனை களம் இறக்கவும் முடிவு பண்ணிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சப் - கான்ட்ராக்ட் எடுத்தவா, சரியா வேலைசெய்யல ஓய்...'' என்றகுப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, 1,916 கோடி ரூபாய்ல நிறைவேத்தி இருக்காளே...'எல் அண்டு டி' நிறுவனம் இந்த பணிகளை முடிச்சு, நீர் செறிவூட்டல் பணியையும்துவங்கிடுத்து ஓய்...
''மொத்தம், 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீரை எடுத்துண்டுபோக, 1,046 கி.மீ.,க்கு குழாய்கள் பதிச்சிருக்கா...ஆனா, ஒரு சில இடங்கள்லகுழாய்ல உடைப்பு ஏற்பட்டு, பெருமளவு தண்ணீர் வீணா போறது ஓய்...
''இந்த பணிகள் நடக்கறச்சே, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, சில பகுதிகளை, 'சப் - கான்ட்ராக்ட்' குடுத்திருக்கா... அந்த நிறுவனம், ஏனோ தானோன்னு செயல்பட்டதா விவசாயிகள் சொல்றா ஓய்...
''அதாவது, 'அ.தி.மு.க.,ஆட்சியில் தான் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கி,'டெண்டர்' விட்டா... அப்பவே, அந்த உள்ளூர் நிறுவனத்துக்குசப் - கான்ட்ராக்ட் தரணும்கிற நிபந்தனையில் தான், டெண்டரை, 'ஓகே' செய்தா... ஆனா, அவா சொதப்பிட்டா'ன்னு விவசாயிகள்புலம்பறா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.