PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: எம்.ஜி.ஆர்., கருணாநிதி
இருவரும் பிராமணர்களுக்கு எதிராக செயல்பட வில்லை. இருவரும் இரட்டை குழல்
துப்பாக்கி போல, நண்பர்களாகவே செயல்பட்டனர். தி.மு.க.,வுக்கு எதிராகவும்
எம்.ஜி.ஆர்., செயல்படவில்லை. சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே,
அ.தி.மு.க., என்ற கட்சியை எம்.ஜி.ஆர்., துவக்கினார். இரண்டு கட்சியிலும்
இருந்தவர் என்ற உரிமையில் பேசுறாரோ... ஆனா, தி.மு.க.,வை தீயசக்தி என்று
எம்.ஜி.ஆர்., அழைத்ததை இவர் மறந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்கள்
மறப்பாங்களா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சி யின் பொதுச்செயலர் ஆனந்த் பேட்டி: மதுரையில் வரும், 21ல் நாங்கள் நடத்த உள்ள மாநாட்டுக்கு, போலீசார் குறிப்பிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். மாநாட்டுக்கான பணிகள், 70 சதவீதம் முடிவடைந்துள்ளன. விக்கிரவாண்டி மாநாட்டை விட சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க, ரொம்ப கடுமையா, 'ஹோம் ஒர்க்' பண்ணியிருப்பாரோ?
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத் தாமன் பேட்டி: தமிழகத்தில் காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து நிலையங்களாக மாறியிருக்கின்றன. பொதுமக்கள், போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாத நிலை உள்ளது. திருநாவலுார் அடுத்த அத்திப்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர், நில தகராறுக்காக போலீசாரால் மிரட்டப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டரால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து இறந்தது தொடர்பாக, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருப்புவனம் அஜித்குமார், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், இதுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லையே... எதிர்க்கட்சிகள் இதை கண்டுக்காம இருப்பது ஏன்
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி: நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி, ஆட்சியை பிடிப்போம் என காய் நகர்த்தி வருகிறார். யார் கட்சி ஆரம்பித்தாலும், பரப்புரை மேற்கொண்டாலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு அடுத்த இடத்தில் யார் வர வேண்டும் என்பது தான் போட்டியே தவிர, ஒரு காலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியாது.
வாஸ்தவம் தான்... இவரை போன்ற கூட்டணி கட்சிகள் தானே தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரண்!