PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, திருத்தணி அடுத்த முஸ்லீம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தண்ணீர் குடிப்பதற்காக புள்ளி மான் ஒன்று நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார், புள்ளி மான் மீது மோதியதில் மான் இறந்தது.
தொடர்ந்து வனத்துறையினர் உடலை மீட்டு கன்னிகாபுரம் வனப்பகுதியில் புதைத்தனர். திருத்தணி தாலுகாவில் கடந்த ஒன்றரை மாதத்தில், தண்ணீர் தேடி வந்த மூன்று புள்ளிமான்கள் விபத்தில் இறந்துள்ளன. எனவே வனத்துறையினர் காப்பு காடு மற்றும் வனப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.