PUBLISHED ON : செப் 02, 2011 12:00 AM

'பை-பாஸ் ரூட்டில்' டிரான்ஸ்பர் போடும் டாஸ்மாக் அதிகாரிகள்...!
''டாஸ்மாக் கடைகள்ல வேலை பார்க்கும் சூப்பர்வைசர்கள் எல்லாம் புலம்பிண்டிருக்கா ஓய்...!'' என, விவாதத்தை துவக்கினார் குப்பண்ணா.''அவங்களுக்கு என்ன குறைச்சலுங்க...?'' என்றார் அந்தோணிசாமி.''டாஸ்மாக் கடைகளை, வருமானத்தின் அடிப்படையில, நாலு தரமா பிரிச்சு வச்சிருக்கா...
ரெண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமா வருமானம் வர்ற கடைகள் முதல் தர கடைகளாம்... அந்த கடைகள்ல வேலை பார்க்கறதை தான் சூப்பர்வைசர்கள் விரும்பறா ஓய்... அங்க தான் வருமானம் ஜாஸ்தி... அ.தி.மு.க., அரசு பொறுப்பேத்ததும், கட்சிக்காராளை இந்த மாதிரி கடைகள்ல நியமிக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கு...
''ஆனா, அதிகாரிகள் கட்சிக்காராளை, 'பை-பாஸ்' பண்ணி, தங்களுக்கு வேண்டப்பட்டவங்கள்ட்ட பணம் வாங்கிண்டு, இந்த மாதிரி கடைகளுக்கு டிரான்ஸ்பர் போட்டு அசத்திண்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''முதல்வரின் கடைக்கண் பார்வை பட்டதால, பதவி கிடைச்சிருக்காம் வே...'' என அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்கு பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''முன்னாள் வாரியத்தலைவரு ரவிச்சந்திரன், தன் குடும்ப சொத்தை விற்று, கட்சிக்காக செலவு செய்து நொந்து போயிருந்தாராம்... தேர்தல்ல போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கலை... அவருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிட்டாவ...''எந்த பதவியும் இல்லாம இருந்த அவரு, போயஸ்கார்டனுல இருந்து, கோட்டைக்கு முதல்வரு வரும் போதும், போகும் போதும் அவங்க கண்ணுல படற மாதிரி நின்னுகிட்டு வணக்கம் போடுவாராம் வே...''இதை கவனிச்ச முதல்வரு, பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிச்சு, அவருக்கு மாவட்டச் செயலர் பதவியை வழங்கியிருக்காராம் வே...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அண்ணாச்சி.
''அறியாமல் செய்த தவறுக்காக, அதிகாரிகள் எல்லாம் பயந்துகிட்டு இருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்குள் புகுந்தார் அந்தோணிசாமி.''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நூற்றுக்கணக்கான நாய்களை பேரூராட்சி சார்புல அடிச்சு, கொன்னுட்டாங்க... 'நாய்களின் இனப்பெருக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்தணும்...
நாய்களை கொல்லக் கூடாது'ன்னு, 'புளுகிராஸ்' அமைப்பு கோர்ட்டுல வழக்கு தொடுத்துச்சாம்...''அந்த வழக்குல இனப்பெருக்கத்தை தடுக்க நாய்களுக்கு ஊசி தான் போடணும்னு கோர்ட்டும் உத்தரவிட்டிருக்காம்... இந்த உத்தரவை அறியாத பேரூராட்சி நிர்வாகம், நாய்களை விஷ ஊசி போட்டு கொன்று புதைச்சுட்டாங்களாம்... இந்த விஷயம் மாவட்டம் முழுவதும் பரவியதால, பேரூராட்சி அதிகாரிகள் எல்லாம், 'புளுகிராஸ்' பயத்துல சிக்கி தவிக்கறாங்க...'' எனச் சொல்லி விட்டு அந்தோணிசாமி கிளம்பவும், மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.