/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
டீக் கடை பெஞ்ச்: கூட்டணி கட்சியினரை ' டம்மி ' யாக்கும் எம்.எல்.ஏ.,
/
டீக் கடை பெஞ்ச்: கூட்டணி கட்சியினரை ' டம்மி ' யாக்கும் எம்.எல்.ஏ.,
டீக் கடை பெஞ்ச்: கூட்டணி கட்சியினரை ' டம்மி ' யாக்கும் எம்.எல்.ஏ.,
டீக் கடை பெஞ்ச்: கூட்டணி கட்சியினரை ' டம்மி ' யாக்கும் எம்.எல்.ஏ.,
PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

''அரசுக்கு இழப்பு ஏற்படுது பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த துறை விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில், 15க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இருக்கு... இங்க, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலா கற்களை வெட்டி எடுத்து, கேரளாவுக்கு கடத்திட்டு போறாங்க பா...
''கனிமவளக் கொள்ளையை தடுக்க, 2013ம் வருஷமே பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு போட்டிருக்கு... அதாவது, 'அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமா கற்களை வெட்டி எடுத்தா, 1 யூனிட் கற்களின் விலையைவிட, 25 மடங்கு அபராதம் விதிக்கணும்'னு சொல்லியிருக்குது பா...
''ஆனா, மடத்துகுளம் தாலுகாவுல அதிகாரிகள் எந்த தணிக்கையும் நடத்துறதே இல்ல... இங்க மட்டும் முறையா ஆய்வு செய்தா, 1,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிற அளவுக்கு கனிமவளக் கொள்ளை நடந்திருக்குது பா...
''ஆனா, அதிகாரிகள், அரசியல் முக்கியப் புள்ளிகளுக்கும் இதுல பங்கு இருக்கிறதால, இதை யாரும் கண்டுக்கிறது இல்ல... இதனால, அரசுக்குதான் பெரும் தொகை இழப்பு ஏற்படுது பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாஜி அமைச்சரை எதிர்த்து போட்டியிட, வேட்பாளரை தயார் பண்ணிட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''வர்ற 2026 சட்டசபை தேர்தல்ல, கோவையில் இருக்கற 10 தொகுதிகள்லயும் தி.மு.க., கூட்டணி ஜெயிக்கணும்னு, மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மேலிடம் உத்தரவு போட்டிருக்கு... ஒவ்வொரு தொகுதிக்கும் யாரை வேட்பாளரா நிறுத்தலாம்னு தனியார் ஏஜன்சி மூலமா ஆய்வு நடக்கறது ஓய்...
''இதுல, தொண்டாமுத்துார் தொகுதியில், அ.தி.மு.க.,வின், 'மாஜி' அமைச்சர் வேலுமணியை எதிர்த்து, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை நிறுத்த முடிவு பண்ணியிருக்கா... சத்யராஜின் உறவினர்கள் நிறைய பேர், தொண்டாமுத்துார் தொகுதியில் குடியிருக்கா ஓய்...
''அதுவும் இல்லாம, மகளுக்கு ஆதரவா சத்யராஜையும் கோவையில பிரசாரத்துல ஈடுபட வைக்கலாம்னு யோசிக்கறா... அதேநேரம், இந்த தொகுதிக்கு குறி வச்சிருந்த மாவட்ட தி.மு.க., புள்ளி, அதிர்ச்சியில இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் ஆளுங்கட்சி மேட்டர் ஒண்ணு இருக்குல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''சீக்கிரம் எடுத்து விடுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சென்னை, பெரம்பூர்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான ஆர்.டி.சேகர், கட்சியில மாவட்ட செயலராகவும் இருக்காரு... வர்ற சட்டசபை தேர்தல்லயும், இதே தொகுதியில களமிறங்க நினைக்கிறாரு வே...
''அதேநேரம், தப்பித் தவறி தொகுதி, கூட்டணி கட்சிகளுக்கு போயிடக் கூடாதுங்கிறதால, தொகுதியில இருக்கிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளை, 'டம்மி'யாக்கிற மாதிரி நடந்துக்கிடுதாரு வே...
''தொகுதிக்குள்ள நடக்கிற எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும், காங்., - ம.தி.மு.க., - வி.சி., - கம்யூ., கட்சி நிர்வாகிகளை கூப்பிட மாட்டேங்கிறாரு... இதனால, வெறுத்துப் போயிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியினர், தொகுதியில் இருக்கிற பல பிரச்னைகளை சுட்டிக்காட்டி, போராட்டம் நடத்த முடிவு பண்ணியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.