/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' மாஜி ' யின் பணத்தை சீட்டாடி தொலைத்த உதவியாளர்!
/
' மாஜி ' யின் பணத்தை சீட்டாடி தொலைத்த உதவியாளர்!
PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM

''க ளத்துக்கே போக மாட்டேன்னு ஓடுதாவ வே...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், வேளாண் அலுவலர் பணியிடங்கள் இருக்கு... இவங்க தான், விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பாவ வே...
''இவங்க, விவசாயிகளை அடிக்கடி சந்திச்சு பேசி, அரசு திட்டங்களை அவங்களிடம் கொண்டு போய் சேர்க்கணும்... சாகுபடி பண்ற பயிர்களின் விபரங்கள், விவசாயி களின் தினசரி செயல்பாடு கள் குறித்து, வேளாண் துறை இயக்குநரகத்துக்கு அறிக்கை அளிக்கணும் வே...
''ஆனா, இதுல வேலைப்பளு அதிகமா இருக்கிறதால, நிறைய அலுவலர்கள் விரிவாக்க மையங்களில் பணிபுரிய விரும்புறது இல்ல... அதுக்கு பதிலா, உழவர் சந்தை, 'அக்மார்க்' சான்றளிப்பு, விதை சான்றளிப்பு துறைகளுக்கு பணிமாறுதல் வாங்கிட்டு போயிடுதாவ... இதனால, விவசாயிகளை சந்திச்சு பேச ஆட்கள் இல்லாம, விரிவாக்க மையங்கள்ல நிறைய இடங்கள் காலியா கிடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''வளர விட மாட்டேங் கறான்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களான, ப.சிதம்பரம், செல்லகுமார் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் மாணவர் காங்., தலைவரா இருந்து தான், முன்னணி தலைவர்களா வளர்ந்தா... அந்த அளவுக்கு, தமிழகத்துல மாணவர் காங்., அமைப்பு, 'பவர்புல்'லா இருந்துது ஓய்...
''இப்ப, தமிழக மாணவர் காங்., தலைவரா இருக்கற சின்னதம்பி, திறமையா செயல்பட்டாலும், அவரை ஊக்கப்படுத்தாம, முடக்கற வேலைகளை தான் சில கோஷ்டி தலைவர்கள் பண்றா... காமராஜர் பிறந்தநாள் விழா, தமிழகத்துக்கு கல்வி நிதி தராத மத்திய அரசை கண்டித்து போராட்டம், ஓட்டு திருட்டை எதிர்த்து கண்டன பேரணின்னு, பல நிகழ்ச்சிகளை மாணவர் காங்கிரசார் நடத்தினாலும், மூத்த தலைவர்கள் யாரும் ஆதரவு தர மாட்டேங்கறா ஓய்...
''இதனால, இளைஞர் காங்கிரசார் மனம் வெறுத்து போயிருக்கா... இது சம்பந்தமா, டில்லி மேலிடத்துக்கும் புகார் அனுப்பி வச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பணத்தை தராம போயிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சமீபத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செஞ்சாரு... தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துாத்துக்குடி, திருச்செந்துார்,ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள்ல அதிகமான கூட்டத்தை திரட்ட, மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பிரமாண்ட ஏற்பாடுகளை பண்ணியிருந்தாரு பா...
''நல்ல கூட்டம் திரண்டதால, பழனிசாமி யும் சண்முகநாதனை ரொம்பவே பாராட்டிட்டு போனாரு... இந்த ஏற்பாடு களுக்கான பணத்தை எல்லாம் செட்டில் பண்ணும்படி, தன் உதவியாளரிடம் பெரும் தொகையை சண்முகநாதன் தந்திருக்காரு பா...
''அவரோ, யாருக்கும் பணம் தரல.. பணம் கிடைக்காதவங்க சண்முக நாதனிடம் முறையிட, உதவியாளரை கூப்பிட்டு கேட்டப்ப, எல்லா பணத்தையும் சீட்டாட்டத்துல இழந்துட்டதா சொல்லியிருக்காரு... அவரை கடுமையா திட்டி அனுப்பிட்டு, இப்ப, பணத்தை எப்படி செட்டில் பண்றதுன்னு தெரியாம, சண்முகநாதன் முழியா முழிக்கிறாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''சாம்ராஜ், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்கள் கிளம்பினர்.