/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சான்றிதழ் வழங்க கறாராக கப்பம் கேட்கும் அதிகாரி!
/
சான்றிதழ் வழங்க கறாராக கப்பம் கேட்கும் அதிகாரி!
PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே , ''அ.தி.மு.க.,வுல, சென்னை புறநகர் மாவட்ட செயலர் கந்தன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுடன் சேர்ந்து தொழில் பண்றதா பேசியிருந்தோமே... 'அப்படில்லாம் எதுவும் இல்ல... பழனிசாமி பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமா பண்ணிட்டு வர்றேன்... அந்த பணிகளை தொய்வடைய செய்ய, இந்த மாதிரி தகவல்களை பரப்புறாங்க'ன்னு கந்தன் சொல்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
உடனே, “கோவை, க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி கதையை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சமீபத்துல இவர், வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினாரு... அந்த வழியா, மூன்று சக்கர வாகனத்துல வந்த மாற்றுத்திறனாளி ஒருத்தரை மடக்கி சோதனை போட்டாரு பா...
“அவர்கிட்ட, கேரளா வில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் ஒரு பண்டல் இருந்துச்சு... அதையும், அவரிடம் இருந்த, 1 லட்சம் ரூபாயையும் போலீஸ் அதிகாரி பறிமுதல் பண்ணி அமுக்கிட்டாரு பா...
“இந்த மாதிரி அடிக்கடி பண்றாரு... பறிமுதல் பண்ணிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு விழுந்தா, அந்த தொகையையும் அவரே வாங்கிடுறாரு... இப்படியே, பல லட்சம் ரூபாய்க்கு அதிபதியாகிட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.
“திருமலைசாமி, சாயந்தரம் வீட்டு பக்கம் வாரும்...” என, நண்ப ருக்கு விடை தந்தபடியே வந்த பெரியசாமி அண் ணாச்சி, “வனத்துறை அதி காரி அலட்சியமா இருக்காரு வே...” என்றார்.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருநெல்வேலி, தென்காசி மாவட்டங் களில் இருக்கிற வனப்பகுதியில் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துதாவ... அதுவும் இல்லாம, மான்கள், மிளா வேட்டை யும் நடக்கு வே...
“சமீபத்துல, ஆலங் கு ளம் அருகே ஊத்துமலை வனப்பகுதியில், தி.மு.க., இளைஞர் அணி புள்ளி ஒருத்தர் தலைமையில், 10 பேர் மூணு கார்கள்ல வந்து, துப்பாக்கியால சுட்டு புள்ளிமான்களை வேட்டையாடியிருக் காவ... இவங்க தப்பி யோடுறப்ப ஒரு கார் விபத்துல சிக்கி, ரோந்து வந்த போலீசாரிடம் மாட்டிக்கிட்டாவ வே...
“அதுலயும் மூணு பேரை தான் கைது செஞ்சாவ... இளைஞர் அணி புள்ளி உட்பட ஏழு பேர் தப்பி ஓடிட்டாவ... மாவட்ட வன அலுவலரோ, பெயரளவுக்கு ஒரு வனவரை மட்டும், 'சஸ்பெண்ட்' பண்ணி கதையை முடிச்சிட்டாரு வே...” என்றார், அண்ணாச்சி.
“அகில்தம்பி டீ சாப்பிடும்...” என, நண்பரை உபசரித்த குப்பண்ணாவே, “தண்டனை வாங்கியும் திருந்த மாட்டேங்கறார் ஓய்...” என்றபடியே, தொடர்ந்தார்...
“சென்னை, தண்டை யார்பேட்டையில், 'சின்ன ஸ்டான்லி' என்ற அரசு புறநகர் மருத்துவமனை இருக்கு... இங்க வேலை பார்த்த அஞ்சு ஊழியர்கள் சமீபத்துல, 'ரிட்டயர்' ஆனா ஓய்...
“இதுல, ஒரு பெண் துப்புரவு பணியாளருக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்க, 15,000 ரூபாயை ஒரு அதிகாரி வாங்கியி ருக்கார்... ஆனாலும், நாலு மாசமா சான்றிதழ் தராம அலைக்கழிச்சிருக்கார் ஓய்...
“அந்தம்மா போய் கேட்டப்ப, 'இன்னும் ரெண்டு, மூணு வேலைகள் இருக்கு... அதை முடிச்சுட்டு தரேன்'னு அசால்டா சொல்லியிருக்கார்... இப்படி எல்லாரிட மும், 'கப்பம் கட்டினா தான் சான்றிதழ்'னு கறாராவே கேக்கறார் ஓய்...
“இவர் ஏற்கனவே, கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு மருத்துவமனையில் வேலை பார்த்தப்ப, இப்படித்தான் பணம் கேட்டு பிரச்னையில மாட்டிண்டார்... அதனால, தண்டனை பணியாதான் தண்டையார்பேட்டைக்கு துாக்கி அடிக்கப்பட்டார்... ஆனா, இங்க வந்தும் திருந்தவே இல்ல ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“சுரேஷ்குமார், இந்த பேப்பரை அங்க வையுங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, நண்பர்கள் கிளம்பினர்.