/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' கட்டிங் ' கேட்டதால் 50 நிழற்குடையை இழந்த மாநகராட்சி!
/
' கட்டிங் ' கேட்டதால் 50 நிழற்குடையை இழந்த மாநகராட்சி!
' கட்டிங் ' கேட்டதால் 50 நிழற்குடையை இழந்த மாநகராட்சி!
' கட்டிங் ' கேட்டதால் 50 நிழற்குடையை இழந்த மாநகராட்சி!
PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

''கோவிலுக்கு போயிட்டு வந்த பக்தர்கள் எல்லாம் புலம்புதாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்த பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்ல, தலைமுடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது... ஆனா, மொட்டை அடிக்கும் ஊழியர்கள், தலைக்கு 150 ரூபாய்னு கட்டாய வசூல் பண்ணுதாவ வே...
''ஏழை எளியவங்க, தங்களது ரெண்டு, மூணு குழந்தைகளுக்கு மொட்டை போட்டுட்டு, பணத்தை கொஞ்சம் குறைச்சு குடுத்தாலும், அதை வாங்காம, தலைக்கு 150 ரூபாய் தரணும்னு பக்தர்களை மிரட்டி, அடாவடி பண்ணி வாங்கிடுதாவ வே...
''அதே மாதிரி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, 1,500 ரூபாய் கட்டணத்தை, 'ஆன்லைன்'ல கட்டிய பக்தர்கள், நேர்ல போய் பிரசாதம் கேட்டா, 'அதெல்லாம் தபால்ல வரும்... இங்க எல்லாம் வராதீங்க'ன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிடுதாவ... 'கோவிலுக்கு வரும் பக்தர்களை மரியாதையா நடத்தணும்'னு அறநிலையத் துறைக்கு பக்தர்கள் பலரும் மனு அனுப்பியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தலைமை வகிக்க வேண்டியவரே வரல பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., மாணவர் அணி மாநில செயலரா, எழிலரசன் எம்.எல்.ஏ., இருந்தப்ப, மும்மொழி கொள்கைக்கு எதிராக, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கினாரு... இதுல, திராவிடர் மாணவர் கழகம், தமிழக மாணவர் காங்கிரஸ், இந்திய மாணவர் பெருமன்றம், மக்கள் நீதி மய்யம் மாணவர் அணின்னு, 'இண்டியா' கூட்டணியில இருக்கும் கட்சிகள் எல்லாம் இடம்பெற்றாங்க பா...
''எழிலரசனுக்கு பதிலாக, மாணவரணி மாநில செயலரா, சமீபத்துல ராஜிவ்காந்தியை நியமிச்சாங்க... இவர் பதவிக்கு வந்த பிறகு, சமீபத்துல இந்த கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலா நடந்துச்சு பா...
''இதை தலைமை வகித்து நடத்த வேண்டிய ராஜிவ்காந்தியே கூட்டத்துல கலந்துக்கல... அதுக்கு பதிலா, 'என்னை மன்னிச்சிடுங்க... மற்றொரு கருத்தரங்கத்துல இருந்தேன்... இந்த மீட்டிங் நேரத்தை கவனிக்க மறந்துட்டேன்'னு, 'வாட்ஸாப்'ல தகவல் அனுப்பிட்டு கமுக்கமா இருந்துட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கட்டிங் தந்தால் தான் காரியம் நடக்குமுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில், தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் ஏதாவது, 'பொது சேவைகள் செய்றோம், கட்டடங்கள் கட்டித் தர்றோம்'னு முன்வந்தா, அதுக்கும் லஞ்சம் கேட்கிறாங்க... சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பகுதிகள்ல, பஸ் பயணியருக்கான நிழற்குடைகளை கட்டி தந்திருக்கிற ஒரு நிறுவனம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலும், தலா 6 லட்சம் ரூபாய் மதிப்புல, 50 நிழற்குடைகள் கட்டித்தர முன்வந்துச்சுங்க...
''ஆனா, மாநகராட்சி முக்கிய புள்ளி தரப்பிலோ, 'ஒரு நிழற்குடைக்கு 50,000 ரூபாய் வீதம் கட்டிங் வெட்டுனா தான் அனுமதி தருவோம்'னு சொல்லிட்டாங்க...
''இதனால, அந்த நிறுவனம், 'திருநெல்வேலியே வேண்டாம்'னு கையெடுத்து கும்பிட்டுட்டு, வேற மாநகராட்சிகளுக்கு போயிடுச்சுங்க... இது சம்பந்தமா, மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ராவிடம் கேட்டா, எந்த பதிலும் தராம மவுனமா இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

