/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தீயணைப்பு வீரர்கள் பயிற்சியில் நிலவும் குளறுபடி!
/
தீயணைப்பு வீரர்கள் பயிற்சியில் நிலவும் குளறுபடி!
PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''துாதரக அதிகாரிகள் கோட்டை விட்டுட்டாங்க பா....'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''வருஷா வருஷம், முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை போவாங்கல்ல... இந்த வருஷம், 1.28 லட்சம் பேர் ஹஜ் போறதுக்கு மத்திய அரசு சார்பில் விசா வாங்கியிருக்காங்க பா...
''அதேநேரம், தனியார் ஏஜன்சி மூலமா விண்ணப்பிச்ச, 52,000 பேருக்கு விசா மறுத்துட்டாங்க... ஹஜ் போகும் பயணியர், அங்க தங்குறதுக்கான கூடாரங்களுக்கு குறிப்பிட்ட வாடகையை சவுதி அரசுக்கு கட்டணும் பா...
''சவுதி அரசு கேட்ட தொகை குறித்து, அங்க இருக்கும் இந்திய துாதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுல இழுபறி ஏற்பட்டிருக்குது... இதனால, நம்ம நாட்டினருக்கு ஒதுக்க வேண்டிய கூடாரங்களை வேற நாடுகளுக்கு சவுதி அரசு ஒதுக்கிடுச்சாம் பா...
''இதனாலதான், 52,000 பேருக்கு விசா கிடைக்கல... இந்த விசாக்களை வாங்கித்தர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வச்சிருக்காரு... 'சவுதி அரசுடன் மத்திய அரசு பேசி, விசாக்களை வாங்கித் தரும்'னு ஹஜ் பயணியர் நம்பிக்கையோட காத்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அங்கன்வாடிகள்ல வசூல் வேட்டை நடத்துறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''நீலகிரி மாவட்டம், மஞ்சமூலா அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆசிரியை இருக்காங்க... இவங்க, இங்க வேலை செய்யாம, கூடலுார்ல இருக்கிற குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், அதிகாரி மாதிரியே முழு நேரமும் பணியில் இருக்காங்க பா...
''அந்த அலுவலக பெண் அதிகாரி, இவங்களை தன் வலது கரம் மாதிரியே வச்சிருக்காங்க... 'தணிக்கைக்கு வர்ற அதிகாரிகளுக்கு தரணும்'னு சொல்லி, மாவட்டம் முழுக்க இருக்கிற, 162 அங்கன்வாடிகள்ல தலா 1,000 முதல், 2,000 ரூபாய் வரை ஆசிரியை வசூல் பண்றாங்க...
''இதுக்கு நடுவுல ஆசிரியையின் கணவர், 'கை' கட்சியின் முக்கிய பிரமுகர்னு சொல்லிட்டு, இந்த அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மிரட்டிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
தெருவில் சென்ற பெண் ஒருவர், 'எங்க மாமியார் வளர்மதிக்கு, அவங்க பொண்ணு விஜயா தான் உசிரு... எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாங்க...' என, மொபைல் போனில் யாரிடமோ புலம்பியபடியே சென்றதை பார்த்து சிரித்த குப்பண்ணா, ''பயிற்றுநர் நியமனத்துல பல குளறுபடி நடக்கறது ஓய்...'' என்றார்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கடந்த 2023ம் வருஷம் போலீஸ், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களா, 3,359 பேரை தேர்வு செய்தா... இதுல போலீசார் மற்றும் சிறை துறையினர் அடிப்படை பயிற்சியை முடிக்கப் போறா ஓய்...
''ஆனா, தீயணைப்பு துறையில மட்டும், போன 1ம் தேதிதான் பயிற்சியை துவங்கியிருக்கா... இப்பதான் நிதி கிடைச்சு, அவசர அவசரமா சென்னை, மதுரை, சேலம், நெல்லை உட்பட ஆறு மாவட்டங்கள்ல பயிற்சி மையங்களை ஏற்படுத்தி இருக்கா ஓய்...
''அதோட, தொலைதுாரத்தில் இருக்கறவாளை, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பயிற்றுநர்களா நியமிச்சு இருக்கா... இதனால, இவா மன உளைச்சலுக்கு ஆளாகி, சரியா பயிற்சி குடுக்க முடியாம திணறிட்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

