/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஊழியர்களை ஒருமையில் திட்டும் பெண் அதிகாரி!
/
ஊழியர்களை ஒருமையில் திட்டும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM

''சந்திக்க நேரம் கேட்டு ஒரு மாசமா காத்திருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை, யாருவே சந்திக்க போறது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., ஜெயகுமாரும், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகரும், முதல்வரை சந்திக்க விரும்பியிருக்காங்க... போன மாசம், சட்டசபை கூட்டத்தொடர் நடந்தப்பவே, இதுக்காக நேரம் கேட்டு, முதல்வர் ஆபீஸ்ல முறைப்படி கடிதமும் குடுத்திருக்காங்க...
''ஆனா, ஒரு மாசம் ஆகியும், இன்னும் அவங்களுக்கு முதல்வர் ஆபீஸ்ல இருந்து அழைப்பு வரலைங்க... 'யாரும், எப்பவும் தன்னை சந்திக்கலாம்'னு முதல்வர் அடிக்கடி சொல்றாரு... ஆனா, கூட்டணி கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,வே அவரை சந்திக்க முடியாம தான் இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இவா கடிதத்தை, முதல்வர் கவனத்துக்கு அதிகாரிகள் எடுத்துண்டு போனாளோ, இல்லியோ...'' என்ற குப்பண்ணாவே, ''ஒன்றரை வருஷம் இருந்தாலும், வளமா சம்பாதிச்சுட்டார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்ட முக்கிய புள்ளியின் நேர்முக உதவியாளரா, பலத்த சிபாரிசுல, தாராபுரம் ஆர்.ஐ.,யா இருந்தவரை ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நியமிச்சா... ஏற்கனவே இருந்த பி.ஏ.,வையும் தாண்டி, இவரது ஆதிக்கம் அதிகமா இருந்துது ஓய்...
''அதிகாரிகளிடம் இவரே பேசறது, டிரான்ஸ்பர்னு பல விஷயங்கள்லயும் புகுந்து, கமிஷன்ல கபடி ஆடினார்... சமீபத்துல, மண் கடத்தின லாரியை விடுவிக்க சொல்லி, வருவாய்த் துறை அதிகாரியை மிரட்டின புகார்ல சிக்கியதால, இவர் மேல முக்கிய புள்ளி கோபமாகிட்டார் ஓய்...
''இதனால, அவரை பி.ஏ., பொறுப்புல இருந்து விடுவிச்சு, பழையபடி ஆர்.ஐ., வேலைக்கே அனுப்பிட்டா... 'குறுகிய காலமே பி.ஏ.,வா இருந்தாலும், கோடிகளை குவிச்சுட்டார்'னு, முக்கிய புள்ளியின் ஆதரவாளர்கள் வாயை பிளக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வினோத், இப்படி உட்காரும்...'' என, நண்பரை அழைத்த அண்ணாச்சி, ''ஜாதி பார்த்து திட்டுதாங்க வே...'' என்றார்.
''ரொம்ப தப்பாச்சே... யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஒரே வேலைக்கு மூணு முறை கமிஷன் வாங்கி, கான்ட்ராக்டர்களை கதற விடுதாங்க வே...
''இவங்களுக்கு லஞ்சம் வாங்கித் தரவே, அஞ்சாறு ஊழியர்களை வச்சிருக்காங்க... தன்னை சிறப்பா, 'கவனிக்கிற' அரியலுார் கடையில தான் பைப், டைல்ஸ் எல்லாம் வாங்கணும்னு கான்ட்ராக்டர்களை கட்டாயப்படுத்துதாங்க வே...
''தனக்கு சரிப்பட்டு வராத அதிகாரிகளையும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கான்ட்ராக்டர்களையும் ஒருமையில திட்டுதாங்க... இவங்க, ஏற்கனவே வேலை பார்த்த இடத்துல, லஞ்சம் வாங்கியதா விஜிலென்ஸ் கேஸ் பெண்டிங்குல இருக்கு வே...
''இங்கயும், அதே வேலையை தொடர்ந்து செய்யுதாங்க... 'என் மேல நடவடிக்கை எடுக்கிற அளவுக்கு மாவட்ட அதிகாரிக்கு ஸ்டப் கிடையாது'ன்னும் கெத்தா பேசுதாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ஜெகன்ஆரா மேடம், ஸ்கூட்டியில இவ்வளவு வேகமா எங்க போறாங்க...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

