PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

''ஏன்டா போராடினோம்னு புலம்புதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனகேட்டார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடியில் இருக்கிற பொதுப்பணித்துறையின் கட்டுமானப் பிரிவு தலைமை அலுவலகத்துக்கு, தீபாவளிக்கு முந்தைய நாள் கான்ட்ராக்டர்கள் சிலர் வந்து, முற்றுகை போராட்டம் நடத்தினாவ...'நாங்க செஞ்சு முடிச்ச பணிகளுக்குரிய பில்களைஉடனே பாஸ் பண்ணி, செக் தரணும்'னு, அதிகாரிகளை மிரட்டுனாவ வே...
''ஆனா, 'உள்ளூர் ஆளுங்கட்சியினர் சிலரதுதுாண்டுதல்ல போராட்டம்நடத்துறாங்க'ன்னு மேலிடத்துக்கு தகவல் தெரிவிச்சுட்டு, அதிகாரிகள் அமைதியாகிட்டாவ...இதனால, கான்ட்ராக்டர்கள்ஏமாற்றத்துடன் திரும்பிட்டாவ வே...
''அதே நேரம், 'போராட்டத்தில் ஈடுபட்டகான்ட்ராக்டர்கள் செய்தபணிகளை மீண்டும் ஆய்வுசெய்து, பில்களை பாஸ்செஞ்சா போதும்'னு மேலிடத்துல இருந்து கறார் உத்தரவு போட்டுட்டாவ... இதனால, 'சும்மா இருந்தவங்களை சுரண்டி விட்டுட்டோமோ'ன்னு கான்ட்ராக்டர்கள் கவலைப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எல்லையோரமா பதுங்கியிருக்காராம் பா...''என, அடுத்த தகவலுக்குமாறினார் அன்வர்பாய்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்துல, பல கட்சிகளுக்கு போயிட்டு வந்த முக்கிய புள்ளி அவர்... ஒரு வழக்குல சிக்கி, ஜெயிலுக்கெல்லாம்போயிட்டு வந்து, மறுபடியும் செல்வாக்கான இடத்துல உட்கார்ந்துட்டாரு பா...
''இவரது தம்பியை, மத்திய விசாரணை அமைப்பு ஒரு வருஷமாதேடிட்டு இருக்கு... அவரும், கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேலா தலைமறைவா இருந்தாரு பா...
''இப்ப, அண்ணனுக்கு பழைய, 'பவர்' வந்துட்டதால, கன்னியாகுமரி மாவட்டம், அப்பர் கோதையாறு அணை பகுதியில இருக்கிற கெஸ்ட்ஹவுஸ்ல, நண்பர்கள் மூணு பேருடன் தங்கிஇருக்காராம்... இந்த அப்பர் கோதையாறு அணைக்கு, திருநெல்வேலிமாவட்டம், மணிமுத்தாறுமாஞ்சோலை எஸ்டேட் வழியா தான் போக முடியும் பா...
''அங்க, 'தம்பி' தங்கியிருக்கிறதால, இந்தவழியா யாரையும் வனத்துறையினர் அனுமதிக்க மாட்டேங்கிறாங்க... எல்லாத்துக்கும் மேலா, அங்க இருந்தபடியே, 'பாட்டில்' துறையில், தமிழகம் முழுக்க நடக்கிறவசூல் விவகாரங்களையும்தம்பி டீல் பண்ணிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''மலையை மொட்டைஅடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம்,உடுமலை, ஆனைமலைபுலிகள் காப்பகத்துக்கு பக்கத்துல இருக்கற பெரிசனம்பட்டி கரடு, ஜம்புக்கல் கரடு பகுதிகள்ல, சட்டவிரோதமா கிராவல் மண்ணை வெட்டி கடத்தறா... தினமும், நுாற்றுக்கணக்கான லாரிகள்ல மண் கடத்தல் நடக்கறது ஓய்...
''வனத்தை ஒட்டிய மலையையும் விட்டு வைக்காம, கனரக இயந்திரங்களை வச்சு கற்களை வெட்டி கடத்தறா... புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு கும்பல், ஒரு லோடுக்கு, 5,400 ரூபாய் வசூல் பண்றது ஓய்...
''புதுக்கோட்டை கும்பலை யாராவது தட்டிக்கேட்டா, கனிமவளத்தைகவனிக்கற முக்கிய புள்ளிபெயரை பயன்படுத்தி, அதிகாரிகளை மிரட்டறா...'இப்படியே போனா, உடுமலை ஊரின் பெயர்லமட்டும் தான் மலை இருக்கும்... மத்ததை எல்லாம் மொட்டை அடிச்சிடுவா'ன்னு இயற்கை ஆர்வலர்கள் புலம்பறா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.