/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் அமைச்சர் உதவியாளரின் அடாவடி!
/
பெண் அமைச்சர் உதவியாளரின் அடாவடி!
PUBLISHED ON : டிச 08, 2025 02:27 AM

''ஆ சிரியர் சங்கங்கள் புகாரால, அதிகாரியை துாக்கியடிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரியைத் தான் சொல்றேன்... இவர், ஆறு மாசத்துக்கு முன்னாடி தான், பெரம்பலுார் மாவட்டத்துக்கு மாறுதல்ல வந்தாரு பா...
''இங்க வந்ததுல இருந்தே, ஆசிரியர்களை ஒருமையில் திட்டுறதும், அடிக்கடி, 'மெமோ' குடுக்கிறதுமா இருந்தாரு... இவரால பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலரும், கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் குடுத்தும் நடவடிக்கை இல்ல பா...
''இதனால வெறுத்து போன ஆசிரியர் சங்கத்தினர், 'கல்வி அதிகாரி அடாவடியால, பெரம்பலுார் மாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவங்களது குடும்பத்தினர் ஓட்டுகள்ல ஒண்ணு கூட, தி.மு.க.,வுக்கு விழாது'ன்னு கூறி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷிடம், மனுவே குடுத் துட்டாங்க...
''இதனால, பதறி போய் அந்த அதிகாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு துாக்கியடிச்சிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கவுசர், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த அண்ணாச்சியே, ''வீட்டை ஆக்கிரமிச்சிட்டாங்க வே...'' என்றார்.
''யாரு ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னையில், போலீசாருக்கு காவலர் குடியிருப்புகள்ல குறைஞ்ச வாடகையில் வீடுகள் ஒதுக்குவாவ... இதை வாங்குற சிலர், அங்க குடியிருக்காம, தங்களுக்கு தெரிந்த போலீஸ்காரர்களுக்கு, குத்தகை அல்லது மேல் வாடகைக்கு விடுதாவ வே...
''இதுக்கு, காவலர் குடியிருப்புகளை பராமரிக்கும் பிரிவில் இருக்கிற போலீசாரும் உடந்தையா இருக்காவ... இந்த வகையில், ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை புரசைவாக்கம் காவலர் குடியிருப்பில் காலியா கிடந்த, 'ஜி பிளாக்' - 12ம் நம்பர் வீட்டை ஆக்கிரமிச்சி, வாடகையே கட்டாம பயன்படுத்திட்டு இருக்காங்க... இதுக்கு, அங்க இருக்கும் பராமரிப்பு பிரிவு போலீஸ்காரரும் உடந்தையா இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மகாலட்சுமி மேடம்... ஜெயபால்கிட்ட பேசிட்டு நாளைக்கு சொல்றேன்...'' என, மொபைல் போனை அணைத்து வைத்தபடி வந்த அந்தோணிசாமி, ''அமைச்சர் உதவியாளரின் அடாவடியை கேளுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தமிழக பெண் அமைச்சர் ஒருத்தருக்கு உதவியாளரா இருக்கிறவர் அவர்... அவங்க, போன, 2006 - 11, தி.மு.க., ஆட்சியில் அமைச்சரா இருந்தப்பவும், இவர் தான் உதவியாளரா இருந்தாருங்க...
''பி.டி.ஓ., அந்தஸ்துல இருக்கிற இந்த அதிகாரியின் உறவினர்கள் பலர், துாத்துக்குடி மாவட்ட அரசு துறைகளில் பணியில இருக்காங்க... கோவில்பட்டி தாலுகா அதிகாரி மீது நிறைய புகார்கள் வந்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காம, இந்த உதவியாளர் பாதுகாத்துட்டு இருக்காருங்க...
''துாத்துக்குடி ஒன்றியத்துல, சமீபத்தில் ஊராட்சி செயலர்களை இட மாற்றம் செஞ்சாங்க... இதுல, அமைச்சர் உதவியாளரின் உறவினர் ஒருத்தரை மட்டும் இட மாறுதல் பண்ணலைங்க...
''ஏன்னா, உதவியாளருக்கு, அந்த பகுதியில் இருக்குற வணிக வளாக நிர்வாகத்தை, அந்த ஊராட்சி செயலர் தான் கவனிச்சிட்டு இருக்காரு... இதனால, அவரை மட்டும் மாத்தாம விட்டுட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
எதிரில் வந்தவரை நிறுத்திய அண்ணாச்சி, ''வாரும் நாராயணன்... கீதா ஜீவன் மேடம்கிட்ட கல்யாணசுந்தரம் பேசிட்டாரு... உம்ம காரியம் சீக்கிரம் முடிஞ்சிடும்...'' என பேச, மற்றவர்கள் நடையை கட்டினர்.

