‘ பில்’ தொகை வழங்க 11 சதவீதம் ‘ கட்டிங்’ கேட்கும் அதிகாரி!
‘ பில்’ தொகை வழங்க 11 சதவீதம் ‘ கட்டிங்’ கேட்கும் அதிகாரி!
PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

ஏலக்காய் டீக்கு, ‘ஆர்டர்’ தந்தபடியே, “ஐகோர்ட் உத்தரவை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“சென்னையில் அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் குடுப்பாங்க... இதை எதிர்த்து கட்டட உரிமையாளர்கள் பலர் ஐகோர்ட்ல மனுக்கள் போட்டு, அவை தள்ளுபடியாகிடுச்சு பா...
“மனுக்களை தள்ளுபடி பண்ணும்போதே, அந்த கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட் உத்தரவு போட்டிருக்கு... ஆனா, மாநகராட்சியின் இளநிலை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம், ‘கட்டிங்’ வாங்கிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க பா...
“உதாரணத்துக்கு, மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் வர்ற எழும்பூர் கெங்கு தெருவில், அனுமதியின்றி கட்டிய கட்டடத்தை ஒரு மாசத்துக்குள்ள மறுசீரமைப்பு செய்யலன்னா பூட்டி சீல் வைக்கும்படி, 2025 ஜூலை 30ல் ஐகோர்ட் உத்தரவு போட்டிருக்கு... உத்தரவு போட்டு ஒன்றரை வருஷமாகியும் அதிகாரிகள், ‘கட்டிங்’ வாங்கிட்டு, நடவடிக்கை எடுத்துட்டதா கணக்கு காட்டிட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“மணல் கொள்ளைக்கு பக்காவா பாதுகாப்பு தர்றாருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“திருச்சியில் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் கரையில், ராத்திரி நேரத்துல ஒருத்தர் லாரிகள்ல மணல் கடத்திட்டு இருக்காரு... மணல் கடத்தலுக்கு அந்த பகுதி போலீஸ் அதிகாரி ஒருத்தர், கொள்ளிட கரையில் அமர்ந்து பாதுகாப்பு குடுக்கிறாருங்க...
“இதுக்காக, அதிகாரிக்கு வாராந்திர மாமூல் வந்துடுது... தீபாவளியை முன்னிட்டு, ஒரு வாரமா தொடர்ந்து மணல் கொள்ளை நடந்துச்சு... இதுக்காக, போலீஸ் அதிகாரிக்கு லட்சக்கணக்கில் மாமூல் குடுத்திருக்காங்க... இதை எல்லாம் எஸ்.பி.,க்கு தெரிவிக்க வேண்டிய தனிப்பிரிவு போலீசாரும் மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம இருக்காங்க...’’ என்ற அந்தோணிசாமியே, ‘‘திவ்யரஞ்சன், ஜெகதீசன் இப்படி உட்காருங்க...” என்றார்.
“கறாரா கட்டிங் கேக்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாநகராட்சியில், கடந்த தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து நடக்கற பணிகளுக்கு, ‘பில்’ தொகை வழங்காம, பொறியியல் பிரிவு அதிகாரி ஒருத்தர் இழுத்தடிக்கறார்... ‘பில் தொகையில் 11 சதவீதம் கமிஷன் வெட்டுனா மட்டுமே பணத்தை வழங்க முடியும்’னு கான்ட்ராக்டர்களிடம் திட்டவட்டமா சொல்றார் ஓய்...
“இது சம்பந்தமா, மாநகராட்சி உயர் பெண் அதிகாரியிடம் கான்ட் ராக்டர்கள் புகார் குடுத்தும், அவங்க கண்டுக்கல... இதனால, கான்ட்ராக்டர் தரப்பு, தாங்கள் செய்ற பணிகளின் தரத்தை குறைச்சிடுத்து ஓய்...
“அதேநேரம், அதிகாரி யின் கெடுபிடி சம்பந்தமா லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார்கள் போயிருக்கு... ‘அவா வந்து ஆய்வு செஞ்சா நிறைய கான்ட்ராக்டர்களும், அதிகாரியும் சிக்குவா’ன்னு ஊழியர்கள் மத்தியில பேசிக்கறா...” என்ற குப்பண்ணாவே, “லெனின், நாளைக்கு பார்க்கலாம் ஓய்...” என்றபடியே எழுந்தார்.
உடனே அந்தோணிசாமி, “சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஜெகதீசன் பத்தி முந்தா நாள் பேசியிருந்தோ மோல்லியோ... அவர் மீது எந்த புகாரும் இல்லன்னு சொல்றாங்க...” என்றபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
