PUBLISHED ON : ஆக 02, 2026 12:21 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “ஆட்கள் பற்றாக்குறையால அல்லாடுறாங்க பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்தத் துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழக போலீஸ்ல, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தனியா இருந்துச்சு... தி.மு.க., ஆட்சியில இதை, மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவுடன் இணைச்சிட்டாங்க பா...
“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 60 கோடி ரூபாய் இடத்தை சிலர் அபகரித்த வழக்கை, நில அபகரிப்பு பிரிவு தான் விசாரிக்குது... ஆனா, இந்தப் பிரிவுல போதுமான போலீசார் இல்லை பா...
“உதவி கமிஷனர் தலைமையில், நாலைஞ்சு போலீசார் தான் இருக்காங்க... ஏற்கனவே இருக்கிற, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்கவே, இவங்களுக்கு நேரம் பத்தலை... இந்தச் சூழல்ல, மீனாட்சி கோவில் வழக்கும் வரவே, போதுமான ஆட்கள் இல்லாம இந்தப் பிரிவு போலீசார் திணறிட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“நாங்க கட்சியிலயே இல்லைன்னு அதிர்ச்சி வைத்தியம் தர்றாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“சட்டசபை தேர்தல் தோல்வி சம்பந்தமா, தி.மு.க., கள ஆய்வுக்குழு, தலைமையிடம் வழங்கிய அறிக்கையில், நிறைய நிர்வாகிகளை மாத்தச் சொல்லி இருந்தாங்க... இதனால, 'தேர்தல்ல உள்ளடி வேலை பார்த்தவங்களை மாத்துவாங்க'ன்னு, ஒன்றிய, நகர மற்றும் வட்ட நிர்வாகிகள் பலரும் காத்திருந்தாங்க...
“ஆனா, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காததால, அதிருப்தியான பல நிர்வாகிகள், தங்களது பதவிகளை ராஜினாமா பண்ணி, தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு கடிதங்களை அனுப்பிட்டு இருக்காங்க... சில நிர்வாகிகள், 'நாங்க மாவட்ட அளவில் த.வெ.க.,வில் சேர்ந்துட்டோம்'னு சொல்லி, அது சம்பந்தமான படங்களை இணைச்சு அனுப்பிட்டு இருக்காங்க... இதைப் பார்த்து, தி.மு.க., தலைமைக் கழக நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“வசூல்ல புகுந்து விளையாடுதாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருவள்ளூர் மாவட்டத்தில், பிரபல சிவன் கோவில் ஊரின் ஒன்றியத்துல, ஒரு அதிகாரி இருக்காரு... இந்த ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் இருக்கு வே...
“இங்க நடக்கிற வளர்ச்சி பணிகளுக்கான, 'பில்'களை, இந்த அதிகாரியிடம் தான் ஊராட்சி செயலர்கள் வழங்கணும்... பில் தொகைக்கு ஒப்புதல் வழங்க, அதிகாரி 30 சதவீதம், 'கட்டிங்' வசூல் பண்ணுதாரு வே...
“இதனால, 'இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரி, 20 சதவீதம் தான் வாங்கினாரு... இவர், 30 சதவீதம் கேட்கிறாரே'ன்னு, ஊராட்சி செயலர்கள் புலம்புதாவ வே...
“அதேபோல, புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும், கறாரா வசூல் பண்ணுதாரு... தனக்கு வசூல் பண்ணித் தரவே, ஒரு ஊராட்சி செயலரை, 'ஏஜன்ட்' மாதிரி நியமிச்சிருக்காரு வே...
“கட்டிங் பணத்தை கையில வாங்கினா, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிடுவோம்னு, தன் உறவினர் ஒருத்தரை தினமும் அலுவலகம் வரவழைச்சு, வசூல் பணத்தை, அவரிடம் குடுக்க சொல்லிடுதாரு வே...” என முடித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“வாங்க பா, முகமது அலி... திருவாலங்காடு சீனிவாசன்கிட்ட இருந்து பணம் ஒழுங்கா வருதா பா...” என, நண்பரிடம் அன்வர்பாய் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
