உறவினர்களை புரோக்கர்களாக்கி ' கட்டிங் ' வாங்கும் அதிகாரி!
உறவினர்களை புரோக்கர்களாக்கி ' கட்டிங் ' வாங்கும் அதிகாரி!
PUBLISHED ON : செப் 17, 2026 12:28 AM

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, “போட்ட உத்தரவை மறுநாளே மாத்திட்டாவ வே...” என, விவாதத்தை ஆரம்பித்தார்.
“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“உணவு பாதுகாப்பு துறையில், மாவட்ட நியமன அலுவலர் பணியிடங்களுக்கு, ஆரம்ப மற்றும் நகர்நல சுகாதார மையங்கள்ல பணிபுரியும் டாக்டர்களை தற்காலிக அடிப்படையில நியமிப்பாவ... இது, பணம் கொட்டும் பதவிங்கிறதால, திராவிட கட்சிகள் ஆட்சியில, அரசியல் செல்வாக்கு மற்றும் பணத்தை கொட்டி குடுக்கிறவங்களுக்கு தான், இந்த பதவிகளை தருவாவ வே...
“ஆட்சி மாறியும் இது மட்டும் மாறல... அதாவது, திண்டுக்கல் மாவட்டம், மரியநாதபுரம் நகர்நல சுகாதார மையத்தில் இருந்த டாக்டர் ஒருத்தர், சுகாதாரத் துறை முக்கிய புள்ளிக்கு உறவினராம்... முக்கிய புள்ளி சிபாரிசில், இவரை சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரா, போன ஆக., 31ல் நியமிச்சாவ வே...
“ஆனா அந்த டாக்டர், தனக்கு திண்டுக்கல்லே வேணும்னு கேட்டதால, போட்ட உத்தரவை ராத்திரி 10:00 மணிக்கு நிறுத்தி வச்சுட்டாவ... மறுநாளான செப்., 1ல், திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பதவியை டாக்டருக்கு குடுத்துட்டாவ...
“இவருக்கு திண்டுக்கல்லை ஒதுக்கிறதுக்காகவே, அங்க வந்து ஒரு வருஷமே ஆன பெண் டாக்டரை அரியலுாருக்கு துாக்கி அடிச்சிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“முத்துகுமார், இப்படி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “இந்த அதிகாரி மேட்டரையும் கேளுங்கோ ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்டத்துல இருக்கற உயர் அதிகாரி, ஒருதலைபட்சமா செயல்படறாராம்... தனக்கு ஆகாத அதிகாரிகள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிச்சா, 'ஆள் பற்றாக்குறை'ன்னு சொல்லி, விண்ணப்பங்களை கிடப்புல போட்டுடறார் ஓய்...
“இதனால, அவா மருத்துவ விடுப்பில் போய் சான்றிதழ்கள் குடுத்தாலும், அதை ஏத்துக்காம, 'ஆப்சென்ட்' போடறார்... அதையும் மீறி, அவா விருப்ப ஓய்வு வாங்கிட்டாலும், ஓய்வுக்கு சில நாட்கள் இருக்கும்போது அவாளுக்கு, '17 பி மெமோ' என்ற குற்ற குறிப்பாணை வழங்கி, அவாளை விருப்ப ஓய்வு பெற விடாம தடுத்துடறார் ஓய்...” என்றார் குப்பண்ணா.
“சரவணன், இதையும் கேட்டுட்டு போங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“பெரம்பலுார் மாவட்ட கல்வி அதிகாரி ஒருத்தர், இன்னும் ஒன்பது மாசத்துல ஓய்வு பெற இருக்கிறதால, முடிஞ்ச வரை வாரி சுருட்டுறாரு... அரசு நிதி உதவி பெறும் ரெண்டு பள்ளிகள்ல, ஒரு முதுகலை ஆசிரியர் மற்றும் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள்னு, ஆறு பணி நியமனங்களுக்கு, தலா 10 முதல் 20 லட்சம் ரூபாய் வாங்கிட்டு, 'போஸ்டிங்' போட்டிருக்காரு பா...
“கல்வி துறையில் பணிபுரியும் தன் உறவினர்கள் நாலஞ்சு பேரை, தன் அலுவலகத்துலயே மாற்றுப் பணியா நியமிச்சு, லஞ்சம் வாங்கி தர்ற புரோக்கர்கள் மாதிரி வச்சிருக்காரு... ஆய்வுக்கு போறப்ப, அரசு பள்ளிக்கு ஒரு தொகை, தனியார் பள்ளிக்கு ஒரு தொகைன்னு நிர்ணயம் பண்ணி லஞ்சம் வாங்குறாரு பா.. .
“எந்த ஆட்சி வந்தாலும் அந்த கட்சி ஆதரவாளரா மாறிடுறாரு... இவரை பத்தி கலெக்டர், பள்ளிக்கல்வி துறை இயக்குநர், செயலர் வரைக்கும் புகார்கள் போயும், எந்த நடவடிக் கையும் இல்ல பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“முத்தழகன், நாளைக்கு பார்க்கலாம் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
