/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் அலுவலர்களை வெளியூர் அழைத்து செல்லும் அதிகாரி!
/
பெண் அலுவலர்களை வெளியூர் அழைத்து செல்லும் அதிகாரி!
பெண் அலுவலர்களை வெளியூர் அழைத்து செல்லும் அதிகாரி!
பெண் அலுவலர்களை வெளியூர் அழைத்து செல்லும் அதிகாரி!
PUBLISHED ON : மார் 18, 2026 02:04 AM

“மா ணவியர் வயித்துல அடிக்கிறாங்க பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சென்னையில், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி உட்பட பல மருத்துவ கல்லுாரி மாணவியர் விடுதிகள்ல, சாப்பாடு ஏற்கனவே சுமாரா தான் இருக்கும்... இப்ப காஸ் சிலிண்டர் பற்றாக்குறையால, தினமும் காலையில, கோதுமை ரவா கிச்சடி, ரவா கிச்சடி, ரவா அல்லது சேமியா உப்புமா தான் குடுக்கிறாங்க பா...
“ராத்திரிக்கு புதினா சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் தான் குடுக்கிறாங்க... 'சப்பாத்தி, பூரி, இட்லி, தோசையை எல்லாம் கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறாங்க... இந்த விஷயத்துல டீன்கள் கொஞ்சம் அக்கறை காட்டணும்'னு மாணவியர் எல்லாம் கேட்கிறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“கல்லுாரி முதல்வர்கள் கவலையை கேளுங்கோ ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கல்லுாரி கல்வி இயக்ககத்தின் தலைமை அலுவலகம், சென்னை சைதாப்பேட்டையில் இருக்கு... இங்க, ஒவ்வொரு பிரிவுக்கும் இணை இயக்குநர்கள் இருக்கா ஓய்...
“தமிழகம் முழுக்க இருக்கற கல்லுாரிகளின் முதல்வர்கள், தங்களது கல்லுாரிகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காக, இணை இயக்குநர்களை பார்க்க வரா... இதுல, ஒரு பெண் இணை இயக்குநர், எந்த கல்லுாரி முதல்வரையும் மதிக்கறதே இல்ல ஓய்...
“தன் அறைக்கு வரவாளை உட்கார கூட சொல்ல மாட்டேங்கறா... ஏதோ, குற்றவாளிகள் மாதிரி அவாளை நிற்க வச்சே பேசி அனுப்பிடறா ஓய்...
“சில முதல்வர்கள், 'உட்காரலாமா மேடம்'னு வாய்விட்டு கேட்டாலும், அதை கண்டுக்கறது இல்லையாம்... 'ஏகப்பட்ட டிகிரிகளை படிச்சிருந்தாலும், இந்தம்மா முன்னாடி கூனி குறுகி நிற்க வேண்டியிருக்கே'ன்னு அவாள்லாம் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “லட்சுமி, சாயந்தரமா கூப்பிடுதேன்...” என கூறி வைத்தபடியே, “பெண் அலுவலர்கள், தன் கூட வரணும்னு கட்டாயப்படுத்துதாரு வே...” என்றார்.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சென்னையில் மாநில தகவல் ஆணையம் இருக்குல்லா... இங்க, ஒரு தலைமை கமிஷனரும், ஆறு கமிஷனர்களும் இருக்காவ வே...
“வெளியூர்களுக்கு விசாரணைக்கு போற கமிஷனர்கள், பெண் ஊழியர்களை அழைச்சிட்டு போகக் கூடாதுன்னு தலைமை கமிஷனர் உத்தரவே போட்டிருக்காரு... ஆனா, ஒரு கமிஷனர் அந்த உத்தரவை காதுலயே போட்டுக்கல வே...
“சமீபத்துல, சென்னைக்கு பக்கத்துல இருக்கிற மாவட்டத்துக்கு போனவர், பெண் அலுவலரை கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போயிருக்காரு... அதோட, அங்க விசாரணையை முடிச்சிட்டு அப்படியே திருப்பதி போயிட்டாரு வே...
“இப்படி, சொந்த வேலையா போனா, தலைமை கமிஷனரிடம் முன் அனுமதி வாங்கணும்... அதையும் வாங்கல... அலுவலக கார் டிரைவரை ராத்திரி, 12:00 மணி வரைக்கும் வேலை வாங்குதாரு வே...
“தன் பேத்தியை, அரசு வாகனத்தில் பள்ளிக்கு அழைச்சிட்டு போக சொல்லுதாரு... இவர் மேல தலைமை கமிஷனருக்கு நிறைய புகார்கள் போயும், இதுவரை நடவடிக்கை இல்ல... 'அவரை திருத்தணும்... அல்லது மாத்தணும்'னு ஊழியர்கள் எல்லாம் சொல்லுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“பிரியகுமார், இப்படி உட்காரும்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

