/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூட்டணியில் இணைய ஓட்டெடுப்பு நடத்தும் கட்சி!
/
கூட்டணியில் இணைய ஓட்டெடுப்பு நடத்தும் கட்சி!
PUBLISHED ON : அக் 04, 2025 12:00 AM

“இ லவச குடிநீருக்கு கட்டணம் வாங்கறா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், நெமிலிச்சேரி ஊராட்சியில் இருக்கும் நாகாத்தம்மன் நகர்ல, 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு... இந்த பகுதி மக்களுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவுல ஆழ்துளை கிணறு அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமா குடுத்துண்டு இருந்தா ஓய்...
“இந்த சூழல்ல, கடந்த, 10 நாட்களா ஒரு குடம் தண்ணீருக்கு, 5 ரூபாய் வீதம் உள்ளூர் ஆளுங்கட்சியினர் வசூலிக்கறா... 'குடிநீருக்கு எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது'ன்னு பூந்தமல்லி பி.டி.ஓ., ஏற்கனவே உத்தரவு போட்டிருக்கார் ஓய்...
“ஆனா, பி.டி.ஓ., பெயர்லயே கட்டணத்தை வசூலிக்கறா... முன்னாடி எல்லாம், 100க்கும் மேற்பட்டோர் வந்து குடிநீர் பிடிச்சுண்டு போவா... இப்ப, பணம் கேக்கறதால பலர் வர்றது இல்ல ஓய்...” என்றார், குப்பண்ணா.
“பெண் அதிகாரிக்கு எதிரானவங்களை சரிக்கட்டும் பணிகள் நடக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனை துாக்குல போட்ட ஊர்ல இருக்கிற, சார் - பதிவாளர் ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... 1992ல் இறந்து போன ஒருத்தர் பெயரில் இருந்த, 3 ஏக்கர் நிலத்தை, அதே பெயர்ல இருக்கிறவருக்கு பத்திரப்பதிவு பண்ணி குடுத்துட்டாங்க பா...
“இந்த பகுதியில் இருக்கிற, 'சோலார்' மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட நிலங்களை முறைகேடா பதிவு பண்ணி குடுத்திருக்காங்க... புரோக்கர்கள் வாயிலா வரக்கூடிய பத்திரங்களை, கேள்வியே கேட்காம பதிவு பண்ணிடுவாங்க பா...
“இவங்க மீது, துறையின் உயர் அதிகாரிகளுக்கு நிறைய புகார்கள் போயிருக்கு... அதிகாரிகளும், இது சம்பந்தமா விசாரணை நடத்திட்டு இருக்காங்க பா...
“இதுக்கு இடையில, பெண் அதிகாரியை கண்டிச்சு போராட்டம் நடத்த போறதா உள்ளூர் மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்காங்க... அவங்களை சரிக்கட்டுற பணியில் அதிகாரியும், புரோக்கர்களும் களம் இறங்கியிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
தன் மொபைல் போனை பார்த்த பெரியசாமி அண்ணாச்சி, “என் தங்கச்சி சாந்தகுமாரி மெசேஜ் அனுப்பியிருக்கா...” என முணுமுணுத்தபடியே, “மதில் மேல் பூனையா இருக்காரு வே...” என்றார்.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்துல, நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய மூவரும், தங்களது சமூகத்தின் பெயர்ல கட்சி துவங்குனாங்கல்லா... அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து, அந்த கட்சி சின்னத்துலயே தேர்தல்ல நின்னு எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தாவ வே...
“இந்த மூணு பேர்ல, தமிமுன் அன்சாரியும், கருணாசும் இப்ப தி.மு.க., அனுதாபிகளா மாறிட்டாவ... தனியரசு மட்டும் தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வான்னு குழப்பத்துல இருக்காரு வே...
“இதனால, தான் நடத்துற தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க இருக்காரு... அதுல ஓட்டு பெட்டி வச்சு, எந்த கூட்டணிக்கு ஆதரவு அதிகம் இருக்குன்னு பார்த்துட்டு, முடிவு எடுக்க போறாரு வே...” என முடித்தார், அண்ணாச்சி.
விவாதம் முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.