/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கல்வி அதிகாரியை 'காய்ச்சி' எடுத்த கட்சி தலைவர்!
/
கல்வி அதிகாரியை 'காய்ச்சி' எடுத்த கட்சி தலைவர்!
PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “உள்ள தள்ள முடியலையேன்னு புலம்புறாங்க...” என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை சமூக வலைதளங்கள்ல விமர்சிக்கிறாங்க... இதனால, சமூக ஆர்வலர்கள் மீது அரசு அதிகாரிகள் கடுப்புல இருக்காங்க...
“இந்த சூழல்ல, சமீபத்துல சமூக ஆர்வலர் ஒருத்தர், தன் மகள் வேலை பார்க்கிற ரேஷன் கடையில உட்கார்ந்து பேசிட்டு இருந்தாருங்க... அங்க யதேச்சையா ஆய்வுக்கு வந்த கூட்டுறவு துறை அதிகாரி, 'யார் நீங்க'ன்னு கேட்க, ரெண்டு பேருக்கும் கைகலப்பாகிடுச்சு... இது சம்பந்தமா, ரெண்டு பேருமே போலீஸ்ல புகார் குடுத்தாங்க...
“இதுல, சமூக ஆர்வலர் மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு பண்ணி, மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்தினாங்க... அங்க, சமூக ஆர்வலரை ஜாமின்ல விடுவிச்சுட்டாங்க... 'அவரை ஜெயிலுக்கு அனுப்ப முடியாம போயிடுச்சே'ன்னு கூட்டுறவு ஊழியர்கள் குமுறிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“ரவி, இப்ப தப்பிச்சுட்டாலும் மாரியப்பன்கிட்ட ஜாக்கிரதையா இரும்...” என, பேசிவிட்டு, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, பா.ஜ., மேலிடம் கடும் கோபத்துல இருக்கு ஓய்...” என்றார்.
“எதுக்குங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“துாத்துக்குடி துறைமுகம் பக்கத்துல, கப்பல் கட்டும் தளம் அமைக்க, மத்திய அரசு முடிவு பண்ணியிருக்கோல்லியோ... இதுக்காக, 1,600 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டிருக்கு ஓய்...
“இப்ப, அந்த இடத்துல உப்பு உற்பத்தி நடந்துண்டு இருக்கு... தங்களது இடத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவிச்சு, உப்பு உற்பத்தியாளர்கள் சமீபத்துல உண்ணாவிரத போராட்டம் நடத்தினா ஓய்...
“இதுல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லபாண்டியன் கலந்துண்டு ஆதரவு தெரிவிச்சிருக்கா... தொழில் வளர்ச்சிக்காக, மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்துக்கு, எதிரணியில் இருக்கும் தி.மு.க.,வே ஒத்துழைப்பு குடுக்கறச்சே, பா.ஜ., கூட்டணியில் இருக்கும், அ.தி.மு.க., மாஜிக்கள் எதிர்ப்பு தெரிவிச்சது, பா.ஜ., மேலிடம் வரை போயிடுத்து... இது சம்பந்தமா, அ.தி.மு.க., தலைமையிடம் மேலிட தலைவர்கள் பேசி, கண்டிச்சிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“அதிகாரியை தாறுமாறா திட்டிட்டாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சென்னை மாவட்ட கல்வி அதிகாரி ஒருத்தர், பதவி உயர்வுல இணை இயக்குநராகிட்டாரு... காலியான கல்வி அதிகாரி இடத்துக்கு யாரையும் நியமிக்கல வே...
“இதனால, அந்த அதிகாரி பார்க்க வேண்டிய பைல்களையும், இணை இயக்குநரே பார்த்திருக்காரு... இதுல, தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கிறதுக்கான பைல்களை எல்லாம், 'கிளியர்' பண் ணிட்டாரு வே...
“அதே நேரம், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர் பரிந்துரை செய்த பள்ளிக்கான பைலை, 'பெண்டிங்'குல போட்டுட்டாரு... இதை கேள்விப்பட்ட கூட்டணி கட்சி தலைவர், அதிகாரியை போன்ல கூப்பிட்டு கடுமையா, 'டோஸ்' விட்டிருக்காரு வே...” என, முடித்தார் அண்ணாச்சி.
“வாங்க புகழ்... உங்க மேல செல்வத்துக்கு அப்படி என்ன கோபம் பா...?” என, நண்பரிடம் அன்வர்பாய் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.