/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரியின் உறவினரிடமே ' கட்டிங் ' வாங்கிய போலீசார்!
/
அதிகாரியின் உறவினரிடமே ' கட்டிங் ' வாங்கிய போலீசார்!
அதிகாரியின் உறவினரிடமே ' கட்டிங் ' வாங்கிய போலீசார்!
அதிகாரியின் உறவினரிடமே ' கட்டிங் ' வாங்கிய போலீசார்!
PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

“ஊழியருக்கே சொத்துவரி விதிக்கல வே...” என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஊழியர் ஒருத்தர், தன் வீட்டுக்கு சொத்துவரி எவ்ளோன்னு கணக்கு கேட்டிருக்காரு... அதை சொல்லாம சிறப்பு வருவாய் ஆய்வாளர் பல மாசமா இழுத்தடிக்காரு வே...
“மாநகராட்சி ஊழியராகவே இருந்தாலும், 'மால்' வெட்டுனா தான் சொத்து வரி சொல்வாராம்... இந்த வருவாய் ஆய்வாளர் மீது நகராட்சி நிர்வாக இயக்குனரிடம், போன மாசமே புகார் போயிருக்கு வே...
“நடவடிக்கை எடுக்கேன்னு சொன்ன இயக்குனர், இதுவரைக்கும் துரும்பை கூட கிள்ளி போடல...ஏற்கனவே, 300 தொழிற்சாலைகளுக்கு வரியே போடலே... 'ஓசூர் மாநகராட்சி ஊழல்ல மூழ்கி திளைக்குது'ன்னு சமூக ஆர்வலர்கள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
''மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி., சுதா, கறாரா இருக்காங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''கறார்ன்னா...? புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண் பேடி மாதிரியா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''இல்லீங்க... வேறு மாதிரி இருக்காங்க... இவங்க தொகுதி மேம்பாட்டு நிதியில, கும்பகோணம் அரசு மருத்துவமனையை சீர்செஞ்சி குடுங்கன்னு, அப்பகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், ராஜ்யசபா எம்.பி., கல்யாண சுந்தரம்ன்னு பல பேரு, கேட்டுட்டே இருக்காங்க... 'முடியாது... தொகுதிக்கான நிதியை, கல்விக்காக மட்டும் தான் செலவழிக்கணும்ன்னு ராகுல்ஜி, 'ஸ்டிரிக்ட்'டா சொல்லிட்டாரு...'ன்னு, முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க...
''போறாத குறைக்கு, தி.மு.க.,காரங்க யாரையுமே இவங்க மதிக்கிறதே இல்லைன்னு பெரிய புகார் பட்டியலே வாசிக்கிறாங்க... மேடைக்கு மேடை வசை பாடவும் செய்யிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
“போலீஸ் அதிகாரி உறவினரிடமே, 'கட்டிங்' வாங்கிட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“அட, யார் ஓய் அது...” என, வியப்பானார் குப்பண்ணா.
“கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா போலீசார், பைக் திருடர்கள் சிலரை போன மாசம் கைது செஞ்சாங்க... இவங்க மீட்ட வாகனங்கள்ல, ஒரு புல்லட் பைக்கும் இருந்துச்சு பா...
“இந்த பைக்கின் உரிமையாளர் கோவையை சேர்ந்தவர் என்பதால, அவருக்கு தகவல் குடுத்தாங்க... அவரும் பைக் கிடைச்ச மகிழ்ச்சியில ஓடோடி வந்தாருப்பா...
“ஆனா, 'உங்க பைக்கை மீட்க, சென்னை வரைக்கும் போயிட்டு வந்திருக்கோம்... நிறைய செலவாகிடுச்சு... 10,000 ரூபாயை வெட்டிட்டு, பைக்கை எடுத்துட்டு போங்க'ன்னு போலீசார் சொல்லிட்டாங்க பா...
“அவரும் வேற வழியில்லாம 10,000 ரூபாயை குடுத்துட்டு, பைக்கை எடுத்துட்டு போயிருக்காரு... இத்தனைக்கும், அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருத்தரின் உறவினராம் பா...
“அது தெரிஞ்சும் அவரிடமே லஞ்சம் வாங்கிய விஷயம், மாவட்ட உயர் அதிகாரி காதுக்கும் போயிடுச்சு... இதனால, என்ன நடவடிக்கை வருமோன்னு கை நீட்டிய போலீசார் கலக்கத்துல இருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.