/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விஜயின் தொண்டர் படையினரால் பொதுமக்கள் அவதி!
/
விஜயின் தொண்டர் படையினரால் பொதுமக்கள் அவதி!
PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

கருப்பட்டி காபியை ருசித்தபடியே, ''போலீசாரே உடந்தையா இருக்காவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எதுக்கு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, மாவட்ட வாரியா உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் இருக்காவ... சென்னையை ஒட்டியுள்ள பட்டுக்கு பேர் போன மாவட்ட தலைநகர்ல, ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் பெரிய கிடங்கு அமைச்சு, அரிசியை பதுக்கி வச்சு, கடத்துதாவ வே...
''அவங்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் பக்கபலமா உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரே இருக்காவ... இதனால, இங்க இருந்து அண்டை மாநிலங்களுக்கு அரிசி கடத்தல் அமோகமா நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷன், மதுபான மாமூல்ல கொழிக்கறது... நம்பர் 1 டோல்கேட் பக்கத்துல இருக்கற பார்ல, காரைக்கால்ல இருந்து வர்ற போலி மதுபானங்களை விக்கறா ஓய்...
''சமீபத்துல, போலி மதுபானங்களை பார்ல இறக்கிட்டு இருந்தப்ப, அங்க வந்த கொள்ளிடம் போலீசார் இருவர், 'கட்டிங்' கேட்டிருக்கா... பார் தரப்புல, 'நாங்கதான் வாராவாரம் மாமூலை ஸ்டேஷன் பெண் போலீசிடம் தந்துடறோமே... நீங்க வேற தனியா கேட்டா எப்படி'ன்னு தயங்கியிருக்கா ஓய்...
''ஆனா ரெண்டு பேரும், 20,000 ரூபாயை கறந்துட்டு தான் கிளம்பியிருக்கா... பார் தரப்பு, விஷயத்தை பெண் போலீஸ் காதுல போட்டதும் இல்லாம, 'அடுத்த வார மாமூல்ல, 20,000த்தை கழிச்சுடுவோம்'னும் சொல்லிடுத்து ஓய்...
''இதனால கடுப்பான பெண் போலீஸ், ஸ்டேஷனுக்கு வந்த ரெண்டு போலீசாரிடமும், 'பார் மாமூல்ல தான் உங்களுக்கும் பங்கு தர்றோமே... தனியா போய் ஏன் வாங்குனீங்க... நீங்க வாங்கியதை உங்க கணக்குல பிடிச்சுடுவேன்'னு சொல்ல, அதுக்கு ரெண்டு பேரும் மறுக்க, 'பஞ்சாயத்து' இன்னும் தீரல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வாங்க ராஜேந்திரன்... ஊர்ல மகாதேவன், மாலதி எல்லாம் சவுக்கியமா...'' என, நண்பரிடம் விசாரித்த அந்தோணிசாமியே, ''நடிகர் கட்சி தொண்டர்களின் ராவடியை கேளுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகம், சென்னை இ.சி.ஆர்., பனையூர் 8வது அவென்யூவுல இருக்கு... சுற்றிலும் ஏராளமான வீடுகள், பங்களாக்களும் இருக்குதுங்க...
''கடற்கரைக்கு இந்த சாலை வழியா தான் போகணும்... விஜய், பொதுச்செயலர் ஆனந்த் எல்லாம் இங்க வர்றப்ப, பாதுகாப்பு என்ற பெயர்ல, கட்சியின் தொண்டர் படையினர் குவிஞ்சிடுறாங்க... கடற்கரைக்கு போற சாலையை மறிச்சு நின்னுடுறாங்க...
''விஜய், ஆனந்த் கார்களோட ஏழெட்டு கார்கள் அணிவகுத்து வருது... இதுபோக தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள்னு அந்த இடம் முழுக்க அவங்க வசமாகிடுதுங்க...
''அந்த பகுதி மட்டுமல்லாம, 7 மற்றும் 9வது அவென்யூவுல வசிக்கிறவங்களும், இ.சி.ஆர்., சாலைக்கு போக சிரமப்படுறாங்க... அவங்களை தொண்டர் படையினர் வழிமறிச்சு, ராணுவ வீரர்கள் பாணியில விசாரணை நடத்திட்டுதான் விடுறாங்க... 'இதுக்கு சீக்கிரமே விஜய் முடிவு கட்டணும்'னு இந்த பகுதி மக்கள் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெஞ்ச் அமைதியானது.

