/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
செம்மரங்களை வெட்ட துடிக்கும் ஆளுங்கட்சியினர்!
/
செம்மரங்களை வெட்ட துடிக்கும் ஆளுங்கட்சியினர்!
PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

''கல்வித் துறைக்கே சவால் விடறாங்க ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையில, ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியை, 'நான் வச்சதுதான் சட்டம்'னு நடந்துக்கறாங்க... இந்த பள்ளியின் ரெண்டு ஆசிரியர்கள் மீது ஒரு மாணவனை விட்டு, 'பி.சி.ஆர்., சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்'னு கடந்த நவம்பர்ல பொய் புகார் குடுக்க வச்சிருக்காங்க...
''அதை மூணு வாரமா சி.இ.ஓ., ஆபீஸ் கண்டுக்கல... உடனே, சமூக ஆர்வலர் ஒருத்தர், 'அந்த புகார்ல ஏன் நடவடிக்கை எடுக்கல'ன்னு கேட்டு, பிரதமர், முதல்வர்னு புகார் அனுப்பிட்டார் ஓய்...
''அவரை துாண்டி விட்டதும், சாட்சாத் தலைமை ஆசிரியை தானாம்... இதை கண்டுபிடிச்சுட்ட சக ஆசிரியர்கள் 50 பேர் சேர்ந்து, 'தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கணும்'னு அரசுக்கு மனு அனுப்பினா ஓய்...
''இதன்படி, துணை கலெக்டர் தலைமையில் ஒரு குழுவை நியமிச்சு, அந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினா... இதுல, 'ரெண்டு ஆசிரியர்கள் மீதும் அளிக்கப்பட்டது பொய் புகார்'னு அறிக்கையும் குடுத்துட்டா ஓய்...
''இதனால, தலைமை ஆசிரியையை மாத்த முடிவு பண்ணியிருக்கா... ஆனா, அவங்களோ சில சமுதாயத் தலைவர்களை அழைச்சுண்டு, அமைச்சர் மற்றும் இயக்குநர் ஆபீஸ்னு நடையா நடக்கறாங்க... அதுவும் இல்லாம, அந்த ரெண்டு ஆசிரியர்களையும் டிரான்ஸ்பர் பண்ண வும் போராடிண்டு இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நாள் முழுக்க, 'சரக்கு' கிடைக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்கிறதா சொல்ற அரசு, மறுபக்கம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் தனியார் அமைப்புகளுக்கு லைசென்ஸ் குடுக்கு... திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், 10க்கும் மேற்பட்ட தனியார் மது விற்பனை மையங்கள் இப்ப முளைச்சிருக்கு வே...
''இதுல, உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது வழங்கணும்னு விதிகள் இருந்தாலும், எல்லாருக்கும் சரக்கு சப்ளை பண்ணுதாவ... 24 மணி நேரமும் இங்க கூடுதல் விலைக்கு சரக்கு கிடைக்கு... கரெக்டா மாமூல் போயிடுறதால, போலீசாரும் கண்டுக்க மாட்டேங்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''செம்மரத்தை வெட்டுறதுக்கு போட்டி போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆந்திராவுலயா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''இல்ல... துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, ஆரைக்குளம் மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்துல, 190 செம்மரங்கள் இருக்கு... இதை வெட்டுறதுல தொகுதி முக்கிய புள்ளியின் சகோதரருக்கும், ஒன்றிய முக்கிய புள்ளிக்கும் கடும் போட்டி நடக்கு வே...
''தொகுதி புள்ளி ஏற்பாட்டுல, மரங்களை வெட்ட வனத்துறையினர் அனுமதி தந்துட்ட சூழல்ல, ஒன்றியம் புகார் குடுத்து, தடுத்து நிறுத்திட்டாரு... ஆளுங்கட்சியினர் நேரடியா சம்பந்தப்பட்டு இருக்கிறதால, வருவாய், வனத்துறையினர் எதுவும் செய்ய முடியாம இருக்காங்க... 'பெரிய பிரச்னை ஆகாம செம்மர பஞ்சாயத்து முடிஞ்சா நல்லது'ன்னு போலீசாரும் பொறுமையா இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''முருகேசன், இளையராஜா இப்படி உட்காருங்கோ...'' என, நண்பர்களுக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.