தொகுதி மாறி ஆய்வு நடத்திய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,!
தொகுதி மாறி ஆய்வு நடத்திய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,!
PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “ரேட் நிர்ணயம் பண்ணி, மாமூல் வாங்குறாருங்க...” என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“திருச்சி மாவட்டம், வளநாடு போலீஸ் ஸ்டேஷன்ல, எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு ஒருத்தர் இருக்காரு... ராஜாகுளம், காலனி குளம் உள்ளிட்ட பல பகுதிகள்ல, தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், ராத்திரி நேரங்கள்ல மணல் கடத்தல்ல ஈடுபடுறாங்க...
“அவங்க மணல் அள்ளும் நாட்கள்ல, இன்ஸ்பெக்டருக்கு 10,000, ஸ்டேஷனுக்கு 7,000, தனக்கு 5,000 ரூபாய்னு, 22,000 ரூபாயை ஏட்டு மாமூலா கறந்துடுறாரு... இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்குரிய பங்கு முறையா போகுதான்னு தெரியலைங்க...
“அதேபோல, சட்டவிரோதமா மது விற்கவும் சிலருக்கு அனுமதி தந்து, வாரா வாரம், 'கட்டிங்' வாங்கிடுறாரு... இதுபோக லாட்டரி விற்பனை, திருவிழாக்கள்ல சூதாட்டம்னு எல்லா சட்டவிரோத காரியங்களுக்கும் தனித்தனி, 'ரேட்' நிர்ணயம் பண்ணி வசூல் பண்றாருங்க...
“யாராவது கேட்டா, 'நான் எஸ்.பி.,க்கு செல்லப்பிள்ளை... என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு, உதார் விடுறாருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அழகேசன் இப்படி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “என்கிட்டயும் ஒரு போலீஸ் மேட்டர் இருக்கு ஓய்...” என்றார்.
“சீக்கிரம் சொல்லுங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“தேனி எஸ்.பி., ஆபீஸ்ல, நிர்வாகப் பதவியில் ஒரு அதிகாரி இருக்கார்... இவர் தான், போலீசாரின் இடமாறுதல், பதவி உயர்வு, அவாளை துறைரீதியான நடவடிக்கையில் இருந்து விடுவிக்கறது போன்ற விவகாரங்களை கவனிக்கறார் ஓய்...
“அதிகாரம் மிக்க பதவியில இருக்கறதால, இதை வச்சே போலீசாரிடம், 'கட்டிங்' வாங்கறார்... முறைப்படி, 'கப்பம்' கட்டினா தான், போலீசாரின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் தருவார் ஓய்...
“இல்லேன்னா, அவாளை அலைய விடறார்... சில போலீசாரிடம் பணத்தை வாங்கியும், காரியத்தை முடிச்சு குடுக்காம இழுத்தடிக்கறார்... இந்த மாவட்டத்துக்கு வந்திருக்கற எஸ்.பி.,யும் புதுசுங்கறதால, நிர்வாக அதிகாரி காட்டுல பணமழை கொட்டறது ஓய்...” என்றார் குப்பண்ணா.
''ஜெயக்கண்ணன், இதையும் கேட்டுட்டு கிளம்புங்க பா...” என, நண்பரை இழுத்துப் பிடித்த அன்வர்பாய், “எம்.எல்.ஏ.,வின் அலப்பறை தாங்க முடியலை பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர், சரவணன்... 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை, கூட்டு பாலியல் பலாத்காரத்துல ஈடுபட்ட தன் கட்சியினருக்கு ஆதரவா செயல்பட்டது, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், லாரி டயர்கள் தேயாம நல்லா இருக்கான்னு ஆய்வு பண்றதுன்னு, ஏடாகூடமா எதையாவது பண்ணிட்டே இருக்காரு பா...
“முக்காணி பகுதியில் நடக்கிற தாமிரபரணி பாலம் சீரமைப்பு பணிகளை, சமீபத்துல சரவணன் ஆய்வு செஞ்சாரு... அங்கிருந்தபடியே அதிகாரிகளுக்கு மாறி மாறி போன் போட்டு, நிறைய கேள்விகளை கேட்டாரு பா...
“சரவணன் கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் தந்த அதிகாரி ஒருத்தர், கடைசியா, 'சார் நீங்க ஆய்வு செஞ்ச பகுதி, திருச்செந்துார் தொகுதிக்குள்ள வருது'ன்னு சொல்லவும், 'ஷாக்'கான சரவணன் அங்கிருந்து நழுவிட்டாரு பா...” என முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.
