PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

''மத்திய அமைச்சர், 'டோஸ்' விட்டதும் தான் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காவ வே...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''பா.ஜ., தகவலாங்க... '' என கேட்டார் அந்தோணிசாமி.
''ஆமா... பா.ஜ., தமிழக தலைவர்கள் சிலர், சமீபத்துல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டில்லியில பார்த்து பேசியிருக்காவ... அப்ப, 'நீட் தேர்வுக்கு எதிராக டில்லியில் போராடிய மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தா, அதை காங்கிரஸ் விமர்சிக்குது...
''அதே காங்., ஆளுங்கட்சியா இருக்கிற கேரளாவுல, அரசுக்கு எதிரா போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, நீர் பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துதாங்க...
''தமிழகத்துல, ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும், காங்., கட்சியின் இரட்டை வேடத்தை நீங்க அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா'ன்னு, 'டோஸ்' விட்டிருக்காரு வே...
''அப்புறமா தான், பா.ஜ.,வினருக்கு ரோஷம் வந்திருக்கு... உடனே, காங்., அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியிருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''அமைச்சருக்கு அதிகாரி சரியா விளக்கம் தரலை பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வு பணிகள் நடக்குதே... இங்க, அகழாய்வு பணிகள் துவங்கியதில் இருந்தே, அதன் தள இயக்குநரா, ரமேஷ் என்ற அதிகாரி தான் இருக்காரு பா...
''கீழடியில் இதுவரை கிடைச்ச பொருட்கள் பற்றிய விபரங்களை, விரல் நுனியில வச்சிருப்பாரு... கீழடிக்கு வர்ற மத்திய, மாநில அமைச்சர்களுக்கு, இவர் தான் விளக்கம் தருவாரு பா...
''இந்த சூழல்ல, தொல்லியல் துறை இயக்குநரா ஜெயசீலன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டாரு... சமீபத்துல, கீழடிக்கு தொல்லியல் துறை அமைச்சரான ராஜ்மோகன், ஆய்வுக்கு வந்தாரு பா...
''அன்னைக்கு தான் ஜெயசீலனும் அங்க வந்தாரு... ஆனாலும், அமைச்சரிடம் ரமேஷை பேச விடாம, தானே விளக்கம் குடுத்திருக்காரு பா...
''அதே நேரம், ஜெயசீலனுக்கு எந்த விபரமும் தெரியாததால, ஏனோதானோன்னு விளக்கம் தந்திருக்காரு... இதனால, அங்க ஒன்பது குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடக்கிற சூழல்ல, ஒரே ஒரு குழியை மட்டும் பார்த்துட்டு அமைச்சர் கிளம்பிட்டாரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''ஆபீசையே, 'பார்' மாதிரி மாத்திட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்துல, தர்மபுரியைச் சேர்ந்த ஒருத்தர் உதவி பொறியாளர் அந்தஸ்துல இருக்கார்... இவர் வெளியில வீடு எடுத்து தங்காம, தனக்கான ஆபீஸ் அறையிலயே தங்கியிருக்கார் ஓய்...
''சும்மா தங்கியிருந்தா கூட பரவாயில்லை... சில ஊராட்சி தலைவர்களுடன் சேர்ந்துண்டு, ராத்திரி நேரங்கள்ல, 'உற்சாக பானம்' உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்திண்டு இருக்கார் ஓய்...
''இதை தட்டிக்கேட்க வேண்டிய ஒன்றிய அதிகாரியும், பொறியாளரும் ஒரே சங்கத்துல இருக்கறதால, எதையும் கண்டுக்காம இருக்கா... 'ராத்திரி நேரங்கள்ல போதையை போட்டுட்டு, ஏதாவது ஏடாகூடமா நடந்துட்டா யார் பதில் சொல்றது'ன்னு, ஊழியர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''முருகேசன்... உம்ம சேக்காளி சூர்யா எங்க வே...'' என, நண்பரிடம் பெரியசாமி அண்ணாச்சி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
