/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' மாஜி ' அமைச்சருக்கு கிடைத்த ' மண்டகப்படி! '
/
' மாஜி ' அமைச்சருக்கு கிடைத்த ' மண்டகப்படி! '
PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

''கிட்டத்தட்ட, 2,000 பிரியாணி பார்சல்களை இலவசமா வாங்கிட்டாவ வே...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அந்த கில்லாடி கள்...'' என, வியந்தார் அந்தோணிசாமி.
''சென்னையில் பிரபலமான ஹோட்டல்ல ஆய்வு நடத்தப் போன, சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை, மருத்துவ பணிகள் துறைக்கு மாத்திட்டாங்கல்லா... பக்கத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம், சென்னையை கூடுதல் பொறுப்பா குடுத்திருக்காவ வே...
''இவர், கூடுதல் பொறுப்பை நிரந்தரமாக்க, காய் நகர்த்திட்டு இருக்காரு... இவர், ஏற்கனவே திருநெல்வேலி யில் பணியில் இருந்தப்ப, வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த புகார்ல சிக்கிய வழக்கு இன்னும் நிலுவையில இருக்கு வே...
''சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், சமீபத்துல சட்டசபையில நடந்துச்சு... இத்துறையின் அமைச்சர் சுப்ரமணியனை, 'ஐஸ்' வைக்க, பொறுப்பு அலுவலர் முடிவு செஞ்சாரு வே...
''இதுக்காக, அவரது தலைமையில், 15க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சென்னையில முகாமிட்டு, பிரபல ஹோட்டல்கள்ல இருந்து, 2,000 பிரியாணி பார்சல்களை இலவசமா வாங்கி, சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட கோட்டையில பணியாற்றும் பலருக்கும் சப்ளை பண்ணியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''போஸ் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''பேக்கேஜ் டெண்டர் பிரச்னையை கேளுங்கோ ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''ஊரக வளர்ச்சி துறையில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒன்றிய அளவுல டெண்டர் விடுவா... திருப்பூர் மாவட்டத்துல இந்த வருஷம், 'பேக்கேஜ் டெண்டர்' முறையில், மொத்தமா ஒரே நிறுவனத்திடம் பணிகளை குடுத்துட்டா ஓய்...
''பதவிக்காலம் முடிஞ்ச, ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளின் முன்னாள் தலைவர்கள், பேக்கேஜ் டெண்டர் எடுத்த நிறுவனத்திடம் இருந்து பணிகளை, 'சப் கான்ட்ராக்ட்' எடுத்து செய்ய களமிறங்கியிருக்கா... இதனால, வேலை கிடைக்காத உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முன்னாள் அமைச்சருக்கு டோஸ் விட்டிருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சைவம், வைணவம் குறித்து ஏடாகூடமா பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி, துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி சார்பில், சமீபத்துல ஆர்ப்பாட்டம் நடந்துச்சு... இதுல, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பேசுறப்ப, 'முதல்வர் ஸ்டாலின் ஒரு தெலுங்கர் என்பதால்தான், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கல... தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழர்கள்தான்... திராவிடர்கள் அல்ல'ன்னு சொல்லியிருக்காரு பா...
''ஆனா, 'கட்சியின் பெயர்லயே திராவிடத்தை வச்சுக்கிட்டு இப்படி பேசலாமா'ன்னு அவரது எதிர்கோஷ்டி, தலைமைக்கு வீடியோ ஆதாரத்தை அனுப்பிடுச்சு... அதை பார்த்து, அவரது கட்சி பொதுச்செயலர் பழனிசாமி கடுப்பாகிட்டாரு பா...
''சண்முகநாதனுக்கு போன் அடிச்சு, 'போராட்டத்துல பேசுறப்ப அந்த சப்ஜெக்ட் பற்றி மட்டும் பேசுங்க... உங்க இஷ்டத்துக்கு உளறி வைக்காதீங்க'ன்னு டோஸ் விட்ட தால, சண்முகநாதன் விரக்தியில இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் நகர்ந்தனர்.