/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சீனியர் ஐ.ஏ.எஸ்.,கள் அதிருப்தியால் நடந்த இடமாறுதல்!
/
சீனியர் ஐ.ஏ.எஸ்.,கள் அதிருப்தியால் நடந்த இடமாறுதல்!
சீனியர் ஐ.ஏ.எஸ்.,கள் அதிருப்தியால் நடந்த இடமாறுதல்!
சீனியர் ஐ.ஏ.எஸ்.,கள் அதிருப்தியால் நடந்த இடமாறுதல்!
PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

மெது வடையை கடித்தபடியே, “தொகுதி தப்புமான்னு பயப்படறார் ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்., -எம்.எல்.ஏ., அமிர்தராஜ், 'கூட்டணி கட்சியினர் கோரிக்கையை ஆளுங்கட்சி கண்டுக்கறதே இல்ல'ன்னு அதிரடியா பேசினாரோல்லியோ... இதனால அவரை கண்டிச்சு, தொகுதி முழுக்க தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டிட்டா ஓய்...
“சமீபத்துல, நெல்லைக்கு போயிருந்த முதல்வர் ஸ்டாலின், துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், அமிர்தராஜ் விவகாரம் குறித்து கேட்டிருக்கார்...
“அதுக்கு தி.மு.க., வினர், 'நம்ம ஓட்டுகளை வாங்கி ஜெயிச்சுட்டு, நம்மையே விமர்சனம் பண்ணா எப்படி...? ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசிடம் இருந்து நாம எடுத்துண்ட மாதிரி, ஸ்ரீவைகுண்டத்தையும் எடுத்துக்கணும் தலைவரே'ன்னு குமுறியிருக்கா... இதை கேள்விப்பட்ட அமிர்தராஜ், தொகுதி பறி போயிடுமோன்னு பதட்டத்துல இருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“நேத்து வந்தவருக்கு டெண்டரான்னு புலம்புதாவ வே...” என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்துல, கேன்டீன் நடத்துறதுக்கான டெண்டர் விட்டிருக்காவ... இதை எடுக்க அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் உட்பட பலரும் விண்ணப்பிச்சிருக்காவ வே...
“இன்னும் யாருக்கும் டெண்டர் ஒதுக்கல... விண்ணப்பிச்சவங்க போய் கேட்டதுக்கு, பிடி குடுக்காம அதிகாரிகள் நழுவுதாங்க வே...
“விசாரிச்சதுல, கேன்டீனை மாநகர் தி.மு.க., துணை புள்ளியின் சொந்தக்காரருக்கு ஒதுக்க முடிவு பண்ணிட்டாங்கன்னு தெரியுது... அந்த நபர் குறிப்பிட்ட தொகை, ரெண்டாவது இடத்துல தான் இருக்கு வே...
“அதுவும் இல்லாம, சமீபத்துல தான்அ.தி.மு.க.,வுல இருந்து தி.மு.க.,வுக்கே வந்திருக்காரு... இதனால, டெண்டரை எதிர்பார்த்துட்டு இருந்த பாரம்பரிய தி.மு.க.,வினர் நொந்து போயிருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“சீனியர் அதிகாரிகள் அதிருப்தியால, தலைவரை மாத்திட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“தமிழக மின் வாரியம், வருஷத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு - செலவு செய்யுது... மின் திட்டங்களுக்கு மத்திய அரசும் நிதி வழங்குறதால, வாரிய தலைவரை அடிக்கடி டில்லிக்கு அழைச்சு ஆலோசனை நடத்துவாங்க பா...
“இப்படி, முக்கியத்துவம் வாய்ந்த மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவிக்கு முதன்மை செயலர், தலைமை செயலர் அந்தஸ்துள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தான் நியமிப்பாங்க... இவர், முதல்வருடன் நேரடி தொடர்புலயும் இருப்பாரு பா...
“வாரியத்தின் தலைவரா, மூணு வருஷத்துக்கு மேல இருந்த ராஜேஷ் லக்கானியை போன வருஷ கடைசியில மாத்திட்டு, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்த குமாரை நியமிச்சாங்க... இதுக்கு, நிதி துறையின் முக்கிய அதிகாரியே காரணம்னு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் அதிருப்தியில இருந்தாங்க...
“இது, ஆட்சி மேலிடத்தின் காதுக்கு போகவும் தான், சமீபத்துல நந்தகுமாரை மாத்திட்டு, கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனை மின்வாரிய தலைவரா நியமிச்சிருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.