/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' ரிடையர் ' ஆகப் போகும் துணைவேந்தரின் அலப்பறை!
/
' ரிடையர் ' ஆகப் போகும் துணைவேந்தரின் அலப்பறை!
PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM

''போ ன மாசம் டீக்கடை பெஞ்ச்சில் அந்தம்மா பத்தி பேசினோமோல்லியோ...'' என, பொத்தம்பொதுவாய் டீக்கடை விவாதத்தை துவக்கினார் குப்பண்ணா.
''யாரை வே சொல்லுதீரு...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''கேரள எல்லைக்கிட்டே, மாவட்ட தொடக்க கல்வி ஆபீசர் அந்தம்மா... அரசு உதவி பெறும் ஸ்கூல்கள்ல, ஆசிரியர் நியமனத்திற்கு நிறைய காசு வாங்கறான்னு பேசினோம்...
''அதைக் கேள்விப் பட்ட சென்னை தொடக்க கல்வி இணை இயக்குநர், இது சம்பந்தமா விசாரிச்சு அறிக்கை குடுக்கச் சொல்லி, அந்தம்மாகிட்டேயே விசாரணைக்கு அனுப்பிட்டார்... பள்ளிக் கல்வித்துறையோட லட்சணத்தைப் பாருங்கோ...
''இதே பெண் ஆபீசர் தான், இன்னொரு ஊர்லயும், ஸ்கூல் அட்மினிஸ்ட்ரேஷன் பிரச்னையில, 25 லட்சம் ரூபாயை வாங்கிட்டா... மறுபடியும், இந்த விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி, இந்தம்மாகிட்டேயே அதே இணை இயக்குநர் லெட்டர் போட்டுட்டார்... என்ன ஓய் செய்யறது...'' என, வெறுப்பாக பேசினார் குப்பண்ணா.
''பொறுத்துக்கும் வே... அந்த ஊர்ல இருக்கிற, நாகலட்சுமியம்மன் பார்த்துப்பா... கவலைப்படாதேயும்...'' என்றார் அண்ணாச்சி.
''சட்டசபை தேர்தலையொட்டி, அதிகாரிகள் பணியிட மாறுதல் வேகமாக நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''ஆமாம்... ஒண்ணொண்ணா வந்திட்டிருக்கே... கூடுதல் தகவல் இருக்கா பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''சட்டசபை தேர்தல் நடக்க, இன்னும் அஞ்சு மாசமிருக்கே... ஒரே எடத்துல மூணு வருஷத்துக்கு மேலே வேலை பார்க்கிறவங்களை, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னே, இடம் மாத்திடுவாங்க... எலக் ஷன் கமிஷன் சொல்றதுக்கு முன்னே, நாமே மாத்திடலாம்ன்னு தமிழக அரசு முடிவு பண்ணிடிச்சிங்க...
''தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை, தேர்தல் வேலையில ஈடுபட வைக்கிறா மாதிரி எல்லாத்தையும் மாத்திக்கிட்டிருக்காங்க... மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்களையெல்லாம், போன 5ம் தேதி மாத்தினாங்க... இன்னும் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள்ன்னு இடமாற்றம் தொடர இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''யுனிவர்சிட்டின்னாலே டிசிப்ளினே இல்லாம போயிடிச்சு பா...'' என கடைசி தகவலை துவக்கினார் அன்வர்பாய்.
''என்னவே...'' என, கண்களை மிகஅகலமாய் விரித்தார் அண்ணாச்சி.
அவரை ரசித்துச் சிரித்தபடியே, ''தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைல, சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனத்துல ஒரு குளறுபடி... புதுசா உறுப்பினர் நியமிக்கணும்ன்னா, மத்த உறுப்பினர்களோட ஒப்புதல் வேணும்... யாராவது ராஜினாமா செய்யிறதா இருந்தா, வேந்தரான கவர்னரோட ஒப்புதல் வேணும்...
''ஆனா, இப்ப துணைவேந்தரா இருக்கிற ஆறுமுகம், இந்த நடைமுறையை, 'பாலோ' பண்ணாம, தன் இஷ்டத்துக்கு சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்யறாரு... வர்ற ஜனவரியில இவருக்கு, 'ரிடையர்மென்ட்' வேற... என்ன நடக்கப் போகுதோ...'' என்றார் அன்வர்பாய்.
பின் அவர் கிளம்பவே, நண்பர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

