PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

'மக்களுக்காக எந்த உருப்படியான வேலையையும் செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர்...' என, எரிச்சலுடன் கூறுகிறார், பா.ஜ., - எம்.பி.,யும், பிரபல போஜ்புரி நடிகருமான ரவி கிஷன்.
இவர், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வெற்றி பெற்ற தொகுதி இது. இதனால், உற்சாகத்தில் இருக்கும் ரவி கிஷன், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் வலம் வருகிறார்.
சமீபத்தில் பார்லிமென்டில் பேசிய ரவி கிஷன், 'நம் நாட்டில், அனைத்து தரப்பினராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பொருள் சமோசா. ஆனால், இது ஒரே விலையில் விற்கப்படுவது இல்லை. ஒரு இடத்தில், 10 ரூபாய்க்கும், மற்றொரு இடத்தில், 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலையை முறைப்படுத்த வேண்டும்...' என்றார்.
அவரது இந்த பேச்சை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்தனர். 'நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இவர், சமோசா பிரச்னையை கிளப்பி, பார்லிமென்ட் நேரத்தை வீணடிக்கிறார்...' என, கேலி பேசினர்.
இதனால் கடுப்பான ரவி கிஷன், 'சாதாரண மக்கள் சாப்பிடும் உணவுப் பொருள், இவர்களுக்கு கிண்டலாக இருக்கிறதா. நல்லதுக்கு காலம் இல்லை...' என, புலம்புகிறார்.