sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண்; உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்

/

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண்; உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண்; உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண்; உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்

53


ADDED : டிச 16, 2025 04:26 AM

Google News

53

ADDED : டிச 16, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், 'இத்துாண் சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.

அக்கட்டமைப்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரியது அல்ல. அத்துாணில் இரவில் தீபம் ஏற்றுவர். அதன் வெளிச்சத்தில் அமர்ந்து சமணர்கள் விவாதிப்பர். ஹிந்துக்கள் உரிமை கொண்டாட முடியாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார், ''திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் (தர்காவிலிருந்து 15 மீ., தொலைவில்) கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,'' என, மனு செய்தார்.

டிச., 1 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் என கோரினார். இதுபோல் கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்ப்வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

'பாரம்பரிய வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்,' என மதுரை கனகவேல் பாண்டியன் மனு செய்தார். இதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கனகவேல் பாண்டியன் மேல்முறையீட்டு மனு செய்தார்.

தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச., 9 ல் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,''நீதிமன்ற உத்தரவு மீண்டும், மீண்டும் மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய தமிழக தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டிச., 17 ல் காணொலியில் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று 2 வது நாளாக விசாரணைக்கு வந்தன.

கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம், ஜோதி, தர்கா நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், வழக்கறிஞர் பிரபுராஜதுரை, கனகவேல் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராயினர்.

நீதிமன்றம் தலையிட முடியாது ஸ்ரீராம்: கோயில் அறங்காவலர் குழுவை எதிர்மனுதாரராக ராமரவிக்குமார் வழக்கில் சேர்க்கவில்லை. தர்கா நிர்வாகம் சேர்க்கப்பட்டது. அறங்காவலர் குழுவின் நிலைப்பாட்டை அறிந்த பின் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தீபத்துாணில் எந்த தேதியில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி குறிப்பிடவில்லை. பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது.

கோயிலின் அன்றாட நடைமுறைகள், வழிபாட்டு முறைகளை கோயில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். வெளியிலிருந்து யாரும் முடிவு செய்ய முடியாது என திருப்பதி கோயில் தேவஸ்தான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் வழிபாட்டு முறைகள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் கிடையாது.

ராமரவிக்குமார் சிவில் நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியிருக்க வேண்டும். நிபுணர்களிடம் கருத்து தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவில் எதுவும் இல்லை.

சமணர்கள் தீபம் ஏற்றுவர் ஜோதி: கோயில் விழாக்கள் குறித்து முடிவெடுக்க சட்டப்படி அறங்காவலர் குழுவிற்குத்தான் அதிகாரம் உள்ளது. அரசு ஊழியராக இருந்த போஸ் எழுதிய 'திருப்பரங்குன்றம்' தலைப்பிலான புத்தகத்தை தமிழக தொல்லியல்துறை 1981ல் வெளியிட்டது. அதில், 'மலைக்குச் செல்லும் பாதி வழியில் தீபத்துாண் உள்ளது.

இதில் நாயக்கர் மன்னர் ஆட்சிக் காலத்திற்குரிய கல்வெட்டு, ஹனுமன் கையை உயர்த்திய நிலையில் உள்ள சிற்பம் இடம்பெற்றுள்ளது. இத்தீபத்துாணில் மட்டும்தான் நாயக்கர் கால ஆட்சியிலிருந்து பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படுகிறது,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ம.பி.,யிலிருந்து வந்த சமணர்கள் மதுரை மாவட்டத்தில் அழகர்கோவில்மலை, நாகமலை, பசுமலை, திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி உள்ளிட்ட 8 இடங்களில் 3 ம் நுாற்றாண்டில் வாழ்ந்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாண் போன்ற கட்டமைப்பு கீழக்குடியில்குடி சமணர்மலையிலுள்ள துாண், கீழவளவு மலையில் 2 துாண்கள், கர்நாடகா சரவணபெலகுளாவில் உள்ளன. இத்துாண் போன்ற கட்டமைப்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரியது அல்ல. அத்துாணில் இரவில் சமணர்கள் தீபம் ஏற்றுவர்.

அதன் வெளிச்சத்தில் அமர்ந்து விவாதிப்பர். இதற்காக மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் சமணர்கள் துாண்களை நிறுவினர். இது பற்றிய குறிப்புகள் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய 'சமணமும், தமிழும்' தலைப்பிலான புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இத்துாண்களை ஹிந்துக்கள் உரிமை கொண்டாட முடியாது. மதுரையில் 9000 சமணர்கள் கழுவேற்றம் செய்யப்பட்டனர். 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார்' என்பது ஏற்புடையது. துாண் இருக்கும் இடங்களில் எல்லாம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது நியாயமல்ல.

துாரம் 15 அடிதான் மோகன்: தர்கா தரப்பு விளக்கமளிக்க போதிய வாய்ப்பை தனி நீதிபதி வழங்கவில்லை. அவசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். எங்கள் தரப்பின் ஆட்சேபனையை தனி நீதிபதி விசாரணையின்போது காணொலியில் ஆஜராகி தெரிவித்தேன். காணொலியின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோயில் சொத்துக்களை தர்கா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது போல் தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல. மத நல்லிணக்கம் நிலவுகிறது. அது தொடர வேண்டும்.

தர்காவில் தொழுகை நடத்தப்படுகிறது. தர்காவிற்குரியவை என ஒதுக்கப்பட்ட பகுதி இருந்தாலும் சிறுபான்மை மக்கள் பல இடையூறுகளை சந்திக்கின்றனர்.

பிரபுராஜதுரை: 1994ல் தாக்கலான ஒரு வழக்கு அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ், 'வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டப தீபத்துாணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம். எதிர்காலத்தில் தேவையெனில் வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம். மாற்று இடம் தர்காவிலிருந்து 15 மீ., அப்பால் இருக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.

ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்துாண் தர்காவிலிருந்து 50 மீ., தொலைவில் அமைந்துள்ளதாக தவறாக குறிப்பிட்டுள்ளார். துாண், தர்கா இடையேயான துாரம் 15 அடிதான்.

ராமரவிக்குமார் கோரும் நிவாரணம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் தான் தீர்வு காண முடியும். சிவில் நீதிமன்றம் நியமிக்கும் கமிஷனர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கமளிக்க வாய்ப்பளித்து முடிவெடுக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிபதி சுவாமிநாதன் மலையை ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வு செய்ய நீதிபதிக்கு அதிகாரம் நீதிபதிகள்: ஆய்வு செய்ய தனி நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

பிரபுராஜதுரை: மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கு சிறு ஆதாரம்கூட இல்லை. மலையை அளவீடு செய்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குரிய எல்லையை நிர்ணயிக்கவில்லை.

நீதிபதிகள்: பல வழக்குகள் ஏற்கனவே தாக்கலாகியுள்ளன. சமாதான கூட்டம் நடந்துள்ளது. தர்கா மலை உச்சியில் அமைந்துள்ளது. எல்லையை நிர்ணயித்து தர்காவிலிருந்து 15 மீ.,க்கு அப்பால் கோயில் தேவஸ்தான நிர்வாகம் தனது பணியை மேற்கொள்ளலாம் அல்லவா.

பிரபுராஜதுரை: இதில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம்தான் முடிவெடுக்க இயலும். அதன் முடிவை ஏற்கலாம். லஜபதிராய்: மத்திய தொல்லியல்துறையின் கருத்துக்களை கோராமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் விசாரணையை இன்று (டிச.16) ஒத்திவைத்தனர்






      Dinamalar
      Follow us