பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
ADDED : மார் 04, 2026 10:50 AM

நமது நிருபர்
ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரான் மீது, அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். தற்போது ஈக்வடாரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ஈக்வடார் படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் எல்லை தாண்டி வரும் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக தான் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஈக்வடாரில் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஈக்வடார் மற்றும் அமெரிக்க படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. மக்கள் மீது பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைத் திணித்து வரும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஈக்வடார் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியதற்காக நாங்கள் பாராட்டுகிறோம்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

