/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலி சான்று கொடுத்தவர்கள் நைசாக, ' எஸ்கேப்! '
/
போலி சான்று கொடுத்தவர்கள் நைசாக, ' எஸ்கேப்! '
PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

''உங்க வீடுங்கள்ல நகை திருட்டு போயி, அசம்பாவிதம் ஏதும் நடந்துச்சுன்னா, நாங்க பொறுப்பில்லை பார்த்துக்குங்க...'' என, பூடகமாய் பேசியபடி டீக்கடைக்கு வந்தார் அந்தோணிசாமி.
''என்ன வே... ஏதோ சொல்லுதீரு...'' என, ஏற்கனவே அங்கு கூடியிருந்த நண்பர்களில், பெரியசாமி அண்ணாச்சி கேட்டார்.
''ஈரோடு, திருப்பூர் பகுதிகள்ல முதிய தம்பதிங்க வீடுகளைக் குறி வச்சி, நகை, பணம் கொள்ளையடிக்கிறவங்களோட அட்டகாசம் அதிகமாயிடிச்சு... கொள்ளையடிக்கிறதோட, கொலையும் செஞ்சிட்டு போயிடறாங்க பாவிங்க...
''இதையே காரணமா வச்சி, ஈரோடு மாவட்ட போலீசுகாரங்க, பண்ணை வீடுகள், தோட்டத்து வீடு, தனியாக உள்ள வீடுகள், வசதியான வீடு, கட்டடம், வணிக நிறுவனங்கள், அனைத்து சங்கங்களையும் கூப்பிட்டு, '1,000 'சிசிடிவி' கேமரா வைக்கப் போறோம்... எங்க மூலமா சில கேமராவும், உங்க சார்பா சில கேமராவும் வைக்கணும்...'ன்னு சொன்னாங்க...
''சில குடியிருப்பு சங்கங்கள், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய்ன்னு குடுத்தாங்க... சில பேரு, ஒருசில கேமரா வாங்கிக் கொடுத்துட்டு ஒதுங்கினாங்க...
''இப்ப என்னடான்னா, 'கேமரா வைக்க ஒத்துழைப்பு தராம, கேமரா வைக்க முடியாம போனவங்களுக்கு ஏதாவது நடந்தால் நாங்க பொறுப்பல்ல'ன்னு, போலீசுக்காரங்க கைவிரிக்கிறாங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.
''ஆமாம்லா... இந்த பிரச்னையை எப்படி சரி செய்யிறது...'' எனக் கூறி, தலையை சொறிந்தபடி, சிந்தித்தார் அண்ணாச்சி.
''பிரச்னை வீட்டு வாசல் வரைக்கும் வந்திருச்சுன்னு சொல்லு பா...'' என்ற அன்வர்பாய், அடுத்த தகவலைத் துவக்கினார்...
''தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு அலை வீசுவதைவிட, ஆதரவு அலைதான் அதிகம் வீசுதுன்னு, முதல்வர்சொல்றாரு பா... ஆனா, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்து மேலே ஒரு கண் இருந்துட்டே இருக்குது...
''பல கட்சிகளின் ஓட்டுகளை இவர் பிரிப்பார்ன்னு, கட்சிக்காரங்க எடுத்துச் சொல்றாங்க... அதனால, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை, களமிறக்க தி.மு.க., முடிவு செஞ்சிருக்கு...
''பிரசாரங்கள்ல என்னென்ன பேசணும்ன்னு முன்கூட்டியே பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்து, சொதப்பல் இல்லாமல் பேச, கமலுக்கு டிரெய்னிங் குடுத்துறலாம்ன்னும் யோசிக்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''ஆமாமா... கமலுக்கு ராஜ்யசபா சீட் குடுத்ததே இதுபோன்ற விவகாரங்களை சமாளிக்க தானே...'' என்ற குப்பண்ணா, கடைசி தகவலை துவக்கினார்...
''விருப்ப ஓய்வில் போயிடுறாளாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவிடம், ''என்னன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''தமிழக மின்வாரியத்தில், 1990 காலகட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களில் சிலர், போலி கல்வி மற்றும் விளையாட்டு வீரர் சான்றுகளை கொடுத்து இருப்பதாக புகார்கள் எழுந்துதே ஞாபகம் இருக்கா...
''இது சம்பந்தமா விசாரணை நடத்தி, அறிக்கை குடுக்கணும்ன்னு போன வருஷமே அதிகாரிகளுக்கு உத்தரவு போச்சு... விசாரணை நடக்கலே... முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால், தங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்பதால், போலி சான்று வழங்கியவர்களில் சிலர், கமுக்கமா விருப்ப ஓய்வில் போயிடுறா...
''விசாரணையை வேகமா நடத்தினா, நிறைய பேர் சிக்குவா போலிருக்கு ஓய்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
'போலாமா...' எனக் கூறியபடி நடையைக் கட்டினர் நண்பர்கள்.