/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கம்!
/
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கம்!
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கம்!
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கம்!
PUBLISHED ON : ஏப் 26, 2026 12:55 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, ''அரசு வாகனங்கள்ல ஜாலியா ஊர் சுத்துதா வ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கிற வகையில், தமிழகம் முழுக்க மாவட்ட வாரியா ஓரிட சேவை மையங்கள் அமைச்சிருக்காவ... திருப்பூர் மாவட்டத்துல, 23 மையங்கள் இருக்கு வே...
''மாற்றுத்திறனாளிகளுக்கான, 'ரைட்ஸ்' என்ற திட்டபடி செயல்படும் இந்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனம் வசம் குடுத்திருக்காவ... திருப்பூர் மையங்களுக்கான நிறுவன பொறுப்பாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அடிக்கடி, 'டூர்' கூட்டிட்டு போய், உற்சாகப்படுத்துதாரு வே...
''இவர், சமீபத்தில் அதிகாரிகள் மற்றும் மையங்கள்ல பணிபுரியும் தனக்கு வேண்டிய ஊழியர்களுடன், திருமூர்த்தி மலைக்கு போய், அங்கயே அசைவ சாப்பாடும் சமைச்சு சாப்பிட்டிருக்காவ... இதுக்கெல்லாம், அரசு வாகனங்களையே பயன்படுத்தியிருக்காவ வே...
''பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு போனா கூட, அரசு வாகனத்துல தான் போறாவ... 'இதை எல்லாம் கலெக்டர் கட்டுப்படுத்தணும்'னு மாற்றுத்திறனாளிகள் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கமலக்கண்ணன் தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணா, ''விடுப்பு எடுத்தவாளுக்கு சம்பளத்தை, 'கட்' பண்ணிட்டார் ஓய்...'' என்றார்.
''நல்ல விஷயம் தானே... மேல சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தனியார் கால்நடை மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி தர, அந்த துறையின் உயர் அதிகாரி கடந்த மாசம், அவசர அவசரமா நடவடிக்கை எடுத்தார்... இதை கண்டிச்சு, கால்நடை மருத்துவ கல்லுாரி மாண வர்கள், போராட்டங்களை நடத்தினா ஓய்...
''அவாளுக்கு ஆதரவா, கால்நடை துறையில் 1,700க்கும் மேற்பட்ட உதவி டாக்டர்கள், தற்செயல் விடுப்பு எடுத்தா... இப்படி விடுப்பு எடுத்தவாளுக்கு ஒரு நாள் சம்பளத்தை, 'கட்' பண்ணிய அதிகாரி, எல்லாருக்கும் விளக்கம் கேட்டு, 'மெமோ'வும் குடுத்துட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சுப்பையன், இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''வியாபாரிகள் ஆதிக்கம் அதிகமா இருக்குதுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியில், 12 இடங்கள்ல நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்காங்க... இங்க நெல் வழங்கும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சர்வே நம்பர், நிலத்தின் உரிமையாளர் யார், என்ன ரக நெல் சாகுபடி பண்ணியிருக்கோம்னு, வருவாய் துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கி, கொள்முதல் நிலையத்துல பதிவு செய்யணும்...
''எல்லா கொள்முதல் நிலையங்களிலும், ஒரு மூட்டை நெல்லுக்கு, ஆளுங்கட்சியினர், 50 முதல் 60 ரூபாய் கமிஷன் வாங்குறாங்க... இதுல சில நெல் வியாபாரி கள், விவசாயிகளிடம் குறைஞ்ச விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி, ஆளுங்கட்சியினருக்கு மூட்டைக்கு, 100 முதல் 200 ரூபாய் வரை குடுத்துட்டு, முன்பதிவு பண்ணாமலே கொள்முதல் நிலையங்கள்ல நெல்லை விற்குறாங்க...
''இதுக்காக, கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கும் கணிசமான தொகையை, 'கட்டிங்'கா தர்றாங்க... இதனால, முன்பதிவு செஞ்ச விவசாயிகள் நெல்லை வாங்க லேட்டாகுது... அவங்க வேற வழியில்லாம, அவசர செலவுக்காக, வியாபாரிகளிடம் குறைஞ்ச விலைக்கு நெல்லை வித்துட்டு போயிடுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பி னர்.

