PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

இஞ்சி டீயை பருகியபடியே, ''அரசு அலுவலகத்துலயே பண பட்டுவாடா பண்ணிட்டாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருவே அந்த கில்லாடி...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியின், த.வெ.க., வேட்பாளர் மணி கவுண்டர்... இவர், சமீபத்துல வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வெளியில வந்தாருங்க...
''அலுவலக வளாகத்துல, மதிய உணவு சாப்பிட்டுட்டு இருந்த தேர்தல் ஊழியர்களை பார்த்து, வணக்கம் போட்டாரு... அவங்களும் பதில் வணக்கம் போட்டாங்க...
''உடனே, மணி கவுண்டர், தன் உதவியாளரிடம், இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை குடுத்து, 'இருக்கிறதுலயே கூடுதல் விலையுள்ள ஸ்வீட்களை வாங்கி, இவங்களுக்கு குடுங்க'ன்னு சொல்லிட்டு போனாருங்க...
''இந்த காட்சிகள் எல்லாம், அங்க இருந்த கண்காணிப்பு கேமராக்கள்லயும் பதிவாகியிருக்கு... இதை, அங்க இருந்த ஒருத்தர் மொபைல் போன்ல வீடியோ எடுத்து, சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டாரு... இதை பார்த்து அதிர்ச்சியான தேர்தல் அதிகாரிகள், ஊழியர்களை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரியின் அரசியல் ஆர்வத்தை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு துறை சார்ந்த செய்திகளை பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப, 'பி.ஆர்.ஓ., திருப்பூர்' என்ற, 'வாட்ஸாப்' குழு இருக்கு... இதுல, பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ., மட்டுமே தகவல்களை பதிவு செய்ய முடியும்...
''பி.ஆர்.ஓ., அலுவலக அதிகாரி ஒருத்தர், 'திராவிடர் விடுதலை கட்சி' என்ற வாட்ஸாப் குழுவில் உறுப்பினரா இருக்காரு... அந்த கட்சியின் வாட்ஸாப் குழுவில் புதியவங்க சேர்றதுக்கான, 'லிங்க்' எனப்படும் இணைப்பை வாங்கி, அதை மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸாப் குழுவில் பதிவேற்றம் பண்ணிட்டாரு வே...
''இது சர்ச்சையாகவே, சில நிமிடங்கள்லயே அந்த இணைப்பை அழிச்சிட்டாரு... இந்த அதிகாரி, அஞ்சு வருஷமா திருப்பூர்லயே நங்கூரம் போட்ட மாதிரி இருக்காரு வே...
''தேர்தல் இடமாறுதல்லயும் இவர் மேல கைவைக்கல... இதனால, இவரை மாத்தணும்னு, திருப்பூர் நுகர்வோர் முன்னேற்ற சங்கத்தினர், தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சதீஷ்குமார், தள்ளி உட்காரும்...'' என்ற அன்வர்பாயே, ''மரங்களை வெட்டி கடத்திட்டாங்க பா...'' என்றார்.
''எந்த காட்டுல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்ல, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இருக்கே... இந்த பல்கலை ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதிகள்ல, நிறைய யூகலிப்ட்ஸ் மரங்கள் இருக்குது பா...
''சமீபத்துல விடுமுறை நாளா பார்த்து, இதுல நிறைய மரங்களை எந்த அனுமதியும் இல்லாம சிலர் வெட்டி எடுத்துட்டு போயிட்டாங்க... இதை, பல்கலையின் உயர் அதிகாரிகளும் கண்டுக்கல பா...
''மரம் வெட்டி கடத்துறதுக்காகவே, பல்கலை மாணவியர் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை குடுத்து, அதுக்கு பதிலா ஒரு சனிக்கிழமை வேலை நாளா அறிவிச்சிருக்காங்க... இந்த செயலுக்கு, குடியிருப்பில் இருக்கும் சில ஊழியர்களும் உடந்தையாம் பா...
''இது சம்பந்தமா, வனத்துறையினர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கணும்னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும், உயர்கல்வி துறை செயலருக்கு மனு அனுப்பியிருக்காங்க...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
