தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ த.வெ.க., முக்கிய புள்ளி ஆதரவாளர்களின் மிரட்டல் வசூல்!

 த.வெ.க., முக்கிய புள்ளி ஆதரவாளர்களின் மிரட்டல் வசூல்!

 த.வெ.க., முக்கிய புள்ளி ஆதரவாளர்களின் மிரட்டல் வசூல்!


PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பில்டர் காபியை ருசித்தபடியே, ''கூண்டோடு மாத்திட்டா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாரை, எங்க வே மாத்திட்டா...'' என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''கடந்த தி.மு.க., ஆட்சியில, அவாளுக்கு விசுவாசமா இருந்த, 22 மாவட்ட சமூக நல அலுவலர்கள், தங்களுக்கு பிடிச்ச மாவட்டங்களுக்கு இடமாறுதல் வாங்கி போயிருந்தா... த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆதரவு அதிகாரிகளை எல்லாம் பந்தாடிண்டு இருக்கா ஓய்...

''அந்த வகையில, 22 மாவட்ட சமூக நல அலுவலர்களையும் ரெண்டு, மூணு மாவட்டங்களை தாண்டி மாத்திட்டா... மாநில அளவிலும், 38 மாவட்ட சமூக நல அலுவலர்களை துாக்கி அடிச்சதும் இல்லாம, 'எல்லாரும் உடனே பணியிடங்கள்ல போய் சேரணும்'னு, அதிரடியா உத்தரவு போட்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தி.மு.க., நிர்வாகிகள் காதுல புகை வராத குறை தான் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''அரக்கோணம் தொகுதி, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் பெரிய தொழிலதிபர்... இவரது மகன் சந்தீப் ஆனந்துக்கு, சட்டசபை தேர்தல்ல, 'சீட்' தர்றதா வாக்குறுதி குடுத்து, கடைசியில ஏமாத்திட்டாங்க பா...

''இதனால, விரக்தியில் இருந்த சந்தீப், த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு... சமீபத்துல, த.வெ.க., பொதுச் செயலரும், நீர்வளத் துறை அமைச்சருமான ஆனந்துக்கு, 62வது பிறந்த நாள் வந்துச்சு பா...

''சந்தீப் ஏற்பாட்டுல, தமிழகம் முழுக்க, 62 ஆதரவற்றோர் இல்லங்கள்ல, 5,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்காங்க... அதோட கோவில், சர்ச், தர்காவுல சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்காங்க பா...

''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி பிறந்த நாளை விட, சந்தீப் பிரமாண்டமா ஆனந்துக்கு பிறந்த நாள் கொண்டாடியதை பார்த்துட்டு, தி.மு.க., நிர்வாகிகள் புழுங்கிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''மிரட்டி மாமூல் வாங்குறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' என கேட்டார்அன்வர்பாய்.

''திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி த.வெ.க., முக்கிய புள்ளியின் ஆட்களை தான் சொல்றேன்... 'கட்டுமான பணிகளுக்கு மணல் ஏத்திட்டு வர்ற லாரிகளால, போக்குவரத்து நெரிசல் ஏற்படுது'ன்னு சொல்லி, 'பில்டர்' ஒருத்தர்கிட்ட பணம் கேட்டிருக்காங்க...

''அவர் தர மறுக்கவே, கட்டுமான பணி நடந்த இடத்தின் கேட்டை இழுத்து பூட்டிட்டு வந்துட்டாங்க... அந்த கேட்டை உடைச்சுட்டு, கட்டு மான வேலையை பார்த்திருக்காங்க... இதனால, கோபமான முக்கிய புள்ளியின் ஆட்கள், அங்க மணல் ஏத்திட்டு வந்த இரண்டு லாரிகளை சிறை பிடிச்சு, '10 லட்சம் ரூபாயை வெட்டுங்க... இல்லேன்னா, லாரிகளை தாசில்தாரிடம் ஒப்படைச்சிடுவோம்'னு மிரட்டியிருக்காங்க...

''பேரம் பேசி, 2.50 லட்சம் ரூபாய் கொடுத்து, மணல் லாரிகளை அதன் உரிமையாளர் மீட்டிருக்காரு... அதேபோல மாதவரம், 200 அடி சாலையில், தனியார் நிறுவன, 'காஸ்' கம்பெனிக்கு போகும் குழாயில் தீ விபத்து நடந்திருக்கு... இதுக்கு காரணமான ஒப்பந்ததாரரை மிரட்டி, பல லட்சம் ரூபாயை வசூல் பண்ணிட்டாங்க...

''மாதவரம் தொகுதி மக்கள், 'இதுக்கு முன்னாடி இருந்த, தி.மு.க., - அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளே தேவலை'ன்னு புலம்பிட்டு இருக்காங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.

''வாங்க, விஜய் பிரபு... உம்ம வலதுகை பிரபு எங்க வே...'' என நண்பரிடம் பெரியசாமி அண்ணாச்சி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us