பாலியல் புகாரில் சிக்கியவருக்கு த.வெ.க.,வில் பதவி!
பாலியல் புகாரில் சிக்கியவருக்கு த.வெ.க.,வில் பதவி!
PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, “அதிகாரி ஆசியுடன் ஆட்டம் போடறார் ஓய்...” என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரக உளவுத்துறையில் ஒரு ஏட்டு இருக்கார்... கிட்டத்தட்ட எட்டு வருஷங்களுக்கும் மேலா உளவுத்துறையிலேயே வலம் வரார் ஓய்...
“தன் துறையின் உயர் அதிகாரியுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருக்கு... இதனால, தனக்கு வேண்டிய ஸ்டேஷன்ல பணியிடம் கேட்டு வாங்கிடறார் ஓய்...
“அதிகாரி பெயரை சொல்லியே, அந்த ஸ்டேஷன்ல ஆதிக்கம் செலுத்தறார்... தனக்கு எதிராக செயல்படும் இன்ஸ்பெக்டர்களை பத்தி, மேலிடத்துக்கு புகார் அனுப்பி, அவாளை இடமாறுதல் பண்ணிடறார் ஓய்...
“மணிமங்கலம் ஸ்டேஷன்ல நாலு வருஷமா இருந்த ஏட்டை, சமீபத்துல பீர்க்கன்கரணை ஸ்டேஷனுக்கு மாத்தினா... அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கும், இவருக்கும் சரிப்பட்டு வரல... இதனால, அதிகாரியின் நட்பை பயன்படுத்தி, மணிமங்கலம் பக்கத்துல இருக்கற சோமங்கலம் ஸ்டேஷனுக்கு ஏட்டு மாறுதல் வாங்கிட்டார் ஓய்...” என்றார் குப்பண்ணா.
“வாங்க மதுசூதனன்.. . உங்க வெங்கடேசன் சார் இப்ப தான் கிளம்பினாரு...” என்ற அந்தோணிசாமியே, “இந்த போலீஸ் தகவலையும் கேளுங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“மதுரை நகர்ல சிறப்பு எஸ்.ஐ.,க்கள் தான் அதிகமா இரவு ரோந்து பணியில ஈடுபடுறாங்க... இவங்களை கண்காணிக்க வேண்டிய நேரடி எஸ்.ஐ.,க்கள், அப்பப்ப குறிப்பிட்ட இடங்களுக்கு சிறப்பு எஸ்.ஐ.,க்களை வரவழைச்சு, ‘ரோல்கால்’ எடுத்துட்டு கிளம்பிடுறாங்க...
“ரோல்கால் பணியை காரணம் காட்டியே, நேரடி எஸ்.ஐ.,க்கள் பெரும்பாலும் ரோந்து பணியில் ஈடுபடுறது இல்ல... இவங்களை அதிகாரிகளும் கண்டுக்கிறது இல்லைங்க...
“பெரும்பாலான சிறப்பு எஸ்.ஐ.,க்களின் வயசு 55க்கு மேல இருக்கு... அவங்களுக்கு, ‘பிரஷர், சுகர்’னு பல பிரச்னைகள் இருந்தாலும், ராத்திரி ரோந்து பணியில ஈடுபடுறாங்க... ஆனா, 30 வயசுக்குள்ள இருக்கிற நேரடி எஸ்.ஐ.,க்கள் ரோந்து பணிக்கு வராம, ‘டிமிக்கி’ குடுக்கிறது, சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“பாலியல் புகார்ல சிக்கியவருக்கு பதவி குடுத்திருக்காவ வே...” என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த கட்சியில பா...” என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.
“த.வெ.க., கொள்கை பரப்பு இணை செயலர் பதவியை, சம்பத்குமார்னு ஒருத்தருக்கு குடுத்திருக்காவ... இவர், 2017ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துல விரிவுரையாளரா இருந்தாரு வே...
“அப்ப, இவர் மீது, ஒரு மாணவி பாலியல் புகார் குடுத்தாங்க... தொடர்ந்து, மேலும் சில மாணவியர் பாலியல் புகார் தந்தாவவே, இது சம்பந்தமா நடந்த விசாரணையில, எல்லாம் உண்மை தான்னு தெரிஞ்சிட்டு...
“இதனால, பல்கலைக்கழக நிர்வாகம் அவரை தகுதி நீக்கம் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டு... இப்படிப்பட்டவருக்கு ஆளுங்கட்சியில முக்கிய பதவியை குடுத்திருக்கிறது, மற்ற நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப , பெஞ்ச் அமைதியா னது.
